”வடநாட்டில் இருக்கக்கூடிய கலாச்சாரம் அசிங்கமான ஒன்று. அவர்கள் குளிக்கவே மாட்டார்கள்” என்று அமைச்சர் துரைமுருகன் பேசியது சர்ச்சையாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தலில் முதல்வர் முக.ஸ்டாலினின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “சென்னை மாநகரத்தில் சளி மற்றும் இருமலுடன் கூடிய வியாதிகள் அதிகம் பரவுகிறது. அதில், நானும் சிக்கிக் கொண்டு 3 மாதங்களாக எங்கும் செல்லாமல் இருந்தேன். சட்டப்பேரவைக்கு போனால் கூட ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு அமர்ந்து விடுவேன்.
முதலில் நான் ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன். மத்தியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி ஒன்று உள்ளது. ஒவ்வொரு மாநிலமும் அவர்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு சலாம் செலுத்துகிறவன் முதலமைச்சராக இருக்க வேண்டும். சலாம் சொல்லாதவனை தூக்கி எறிய வேண்டும் போன்ற வேலைகளை செய்து வருகின்றனர்.
வடநாட்டில் இருக்கக்கூடிய கலாச்சாரம் அசிங்கமான ஒன்று. நாம் பண்பாடு மிக்கவர்கள். ஆனால், நாடாளுமன்றத்தில் நம்மைப் பார்த்து நாகரிகமற்றவர்கள் என்று ஒரு அமைச்சர் சொல்கிறார். வட மாநிலத்தவர் யாரும் குளிக்கக்கூட மாட்டார்கள். ஆனால், தமிழர்கள் ஒரு நாளைக்கு இரண்டு வேலை குளிப்பார்கள். வட மாநிலத்தவர்கள் குளிக்காமல் இருப்பது பற்றி ஒரு கதை கூறிய துரைமுருகன், கேவலமான பிறவி நீங்கள் என்று விமர்சித்தார்.
நம் ஆட்சியை கைப்பற்றுவது அவர்களின் நோக்கம் அல்ல. தமிழ் கலாச்சாரத்தை அழிப்பது தான் அவர்களின் நோக்கமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் தற்போது அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் போன்ற பெருந்தலைவர்கள் இல்லை. தமிழ்நாட்டில் ஒரு சின்னப் பையன் ஒற்றை உருவம் அவனால் எதிர்கொள்ள முடியாது என்று பேசியிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு தெரியாது முத்துவில் கருணாநிதியின் மகன் ஸ்டாலின் ஒற்றை நாடி உருவம் தான். 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகள் நிச்சயமாக வெல்வார்” என்று பேசியுள்ளார்.