தலைநகர் சென்னையில் காற்றின் தரம் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையைக் காட்டிலும் மோசமாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிரீன்பீஸ் இந்தியா என்ற அமைப்பு நாடு முழுவதும் இருக்கும் முக்கிய நகரங்களின் காற்றின் தரம் மற்றும் மாசு குறித்த ஆய்வை செய்து ஸ்பெர் தி ஏர் என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதல் காட்டிலும் சென்னையில் காற்றில் மாசுபடுத்தும் துகள்கள் அதிகமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் பாதுகாப்பான அளவை காட்டிலும் மாசுபடுத்தும் துகள்கள் பல மடங்கு அதிகமாக உள்ளது.
பொதுவாகக் காற்றில் உள்ள துகள்கள் அவற்றின் சைஸ் பொறுத்து அவை வரையறுக்கப்படுகிறது. அதன்படி, 10 மைக்ரான் அல்லது அதற்கும் குறைவான விட்டம் (PM10) கொண்ட துகள்கள் நுரையீரல் உள்ளே செல்லும். இது மோசமான ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தும். அதேபோல 2.5 மைக்ரான் அல்லது அதற்கும் குறைவான விட்டம் (PM2.5) கொண்ட துகள்கள் நுண்ணிய துகள்கள் என வரையறுக்கப்படுகிறது.
சென்னையில் கடந்தாண்டு நடத்தப்பட்ட ஆய்வில் நகரில் சராசரி PM10 அளவு என்பது 45.9 μg/m³ ஆக இருக்கிறது. இது பாதுகாப்பான அளவை (15 μg/m³) காட்டிலும் 3.1 மடங்கு அதிகமாகும். அதேபோல சென்னையில் சராசரி நைட்ரஜன் டை ஆக்சைடு அளவும் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த அளவை காட்டிலும் 1.5 மடங்கு அதிகமாக இருக்கிறது. இதைக் குறைக்க நாம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த ஆய்வு ஒரு பக்கம் இருக்க, நகரின் மாசுபட்ட பகுதிகளில் காற்றின் தரத்தை மேம்படுத்தச் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, மின்சார போக்குவரத்து உள்கட்டமைப்பை உருவாக்குவது, சாலை துப்புரவு பணிகளை இயந்திரமயமாக்கல் போன்ற நடவடிக்கைகளை எடுக்கச் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களில், சென்னை மாநகராட்சி பல இடங்களில் செயற்கை நீரூற்றுகளை உருவாக்கியுள்ளது. அந்த பகுதிகளில் அவை காற்றின் தரத்தைக் கணிசமாகக் குறைத்துள்ளன. இதனால் வாகனங்கள் அதிகம் இருக்கும் சாலை சந்திப்புகளில் அதிகளவில் நீரூற்றுகளை உருவாக்க முடிவு செய்துள்ளனர்.
மேலும், சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் ஆகாய நடைமேடை அமைக்கவும் முடிவு செய்துள்ளனர். தி.நகரில் சமீபத்தில் ஆகாய நடைமேடை அமைக்கப்பட்ட நிலையில், அது அப்பகுதியில் வாகன நெரிசலைக் கணிசமாகக் குறைத்து காற்று மாசையும் கணிசமாகக் குறைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,
சென்னையில் காற்றில் இருக்கும் துகள்களின் எண்ணிக்கை உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையைக் காட்டிலும் அதிகம் என்றாலும் பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, லக்னோ ஆகிய நகரங்களை ஒப்பிடும் போது சென்னையில் காற்று மாசு குறைவாகவே இருந்துள்ளது. காற்றில் PM2.5 அதிகம் இருந்தால் அது ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.