பெங்களூருவில் தாயை கொலை செய்த மகள், உடல் சூட்கேசில் வைத்து எடுத்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் என்எஸ்ஆர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சோனாலி சென். 38 வயதான இவர் பிசியோதெரபிஸ்ட் ஆக பணிபுரிந்து வருகிறார். இவருடைய தாயாரும் (70) அதே குடியிருப்பில் ஒன்றாக வசித்து வந்துள்ளார். தாய்க்கும், மகளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கம்போல் இருவருக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த சோனாலி சென், தாய் பிவா பவுலுக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்து தூங்க வைத்து பின்னர் கழுத்தை நெறித்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. உடலை என்ன செய்வது என தெரியாத அவர், அம்மாவின் உடலை சூட்கேசில் வைத்து மிக்கோ லே அவட் காவல்நிலையம் எடுத்து சென்றார்.
இரவில் பெண் ஒருவர் சூட்கேசுடன் வந்ததால் அவரிடம் போலீசார் வழக்கமாக விசாரித்தனர். அப்போது தாயை கொலை செய்ததாகவும், உடல் சூட்கேசில் எடுத்து வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.