சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சார்கோட்டை அருகே பொயாவாழ் ஊராட்சி ஒன்றிய பள்ளியில், 9 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் சக்தி. தந்தை உயிரிழந்த நிலையில், தாய் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கம்யூட்டர் பாடப்பிரிவின் போது கம்யூட்டர் இணைப்பு கொடுக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மாணவனை மின்சாரம் தாக்கியது.
உடனே பள்ளி ஆசிரியர்கள் மாணவனை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மாணவனை பரிசோதித்த டாக்டர் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். தகவல் அறிந்த கிராம மக்கள் பள்ளியை முற்றுகை இட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாணவனின் இழப்பிற்கு பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவே காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த காரைக்குடி வட்டாச்சியர், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றார். இந்த சம்பவம் குறித்து இதுவரை மாவட்ட கல்வி நிர்வாகமோ, பள்ளி நிர்வாகமோ எந்த விளக்கமும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. அரசு சார்பில் வட்டாச்சியர் மட்டும் சம்பவ இடத்திற்கு வந்து உறவினர்களிடையே சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.