இந்தியாவில் நடுத்தர வர்க்கம் கடும் ஆபத்தில் சிக்கியுள்ளது என போர்ட்ஃபோலியோ மேலாண்மை சேவை நிறுவனமான மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் சவுரப் முகர்ஜி எச்சரித்துள்ளார். அவரது கூற்றுப்படி, இந்திய நடுத்தர வர்க்க மக்கள் கடனில் மூழ்கி வருவதை உணராமல், வரப்போகும் ஆபத்தையும் புரிந்துகொள்ளாமல் உள்ளனர். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது இந்திய மிடில் கிளாஸ் கடன் சுமையில் சிக்கியிருப்பது சோகமான நிலை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
உலகம் முழுவதும் வேலை இழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் இளம் பிரிவான 18-25 வயதினர் குறைந்த சம்பளத்தில் வேலை பெற முடிகிறது. ஆனால், 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் வேலை இழப்புகளுக்கு ஆட்படுவதற்கான அபாயம் அதிகரித்து வருகிறது. இது இந்தியர்கள் தங்களது பொருளாதாரத்தை திட்டமிடத் தவறுவதன் விளைவாகவும் பார்க்கப்படுகின்றது.
மேலும், இந்திய நடுத்தர வர்க்க வாழ்க்கை முறை மாறப்போகின்றது. ஒரே நிறுவனத்தில் 30 ஆண்டுகள் வேலை செய்து, சிறிது சேமித்து வாழ்க்கை நடத்தும் பழைய முறை இனி தொடராது. தொழில்நுட்ப முன்னேற்றங்கள், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியால், தொழில்கள் மாற்றமடையும். IT சேவைகள், வங்கி துறைகள் மற்றும் ஊடக துறைகள் முதலியன அதிகம் பாதிக்கப்படும். நிலையான அலுவலக வேலைகள் குறைந்து, ஃப்ரீலான்ஸ் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான வேலைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 1 முதல் 3 ஆண்டுகளில் மக்கள் தொழில் மாற்றத்திற்கும், பொருளாதார திட்டமிடலுக்கும் தயார் ஆக வேண்டிய அவசியம் இருப்பதாக சவுரப் முகர்ஜி வலியுறுத்தினார். மிகவும் முக்கியமாக, இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தின் ‘சம்பள அடிப்படையிலான வாழ்க்கை’ முறை முடிவுக்கு வரப்போகிறது. எதிர்காலத்தில், பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் என இரு முரணான பிரிவுகளாக மட்டுமே சமூக அமைப்பு உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
Read more: மகாபாரதம் திரைப்படத்தில் நடிகர் நானிக்கு முக்கிய ரோல்.. அப்டேட்டை தந்த ராஜமௌலி..!!