கபிர் சிங் படத்தில் நடித்ததை நினைத்து வருத்தப்படுவதாக ஆதில் ஹுசைன் தெரிவித்த நிலையில் படத்தில் அவரின் முகத்தை AI மூலம் மாற்றிவிடுவேன் என கூறியிருக்கிறார் இயக்குநர் சந்தீப் வாங்கா ரெட்டி.
சந்தீப் வாங்கா ரெட்டி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படம் இந்தியில் கபிர் சிங் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. ஷாஹித் கபூரை வைத்து சந்தீப் வாங்கா ரெட்டி தான் அந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்தார். அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் சர்ச்சைக்குரிய இயக்குநராக பேசப்பட்டவர் சந்தீப் ரெட்டி வங்கா. தொடர்ந்து கடந்த ஆண்டு இந்தியில் வெளியாகிய அனிமல் படத்தை இயக்கியிருந்தார். அர்ஜூன் ரெட்டி படத்தை விட இருமடங்கு விமர்சனங்கள் இந்தப் படத்திற்கு குவிந்தன.
பல்வேறு தரப்பினரும், இந்தப் படத்திற்கு எதிரான தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள். இந்நிலையில், கபிர் சிங் படத்தில் நடித்த ஆதி ஹுசைன் ஒரு நேர்காணலில், ”அர்ஜூன் ரெட்டி படத்தில் நடிக்க எனக்கு விருப்பமில்லை . எப்படியாவது இந்தப் படத்தில் நடிப்பதை தவிர்த்துவிடலாம் என்று நினைத்து வேண்டுமென்றே சம்பளத்தை அதிகமாக கேட்டேன் . ஆனால் அதையும் கொடுக்க படக்குழுவினர் சம்மதித்துவிட்டார்கள்.
எனக்கு கொடுக்கப் பட்ட ஒரு சில காட்சிகளில் மட்டும் நடித்துவிட்டு வந்துவிட்டேன். கபிர் சிங் ரிலீஸான பிறகு அதை பார்க்க டெல்லியில் இருக்கும் தியேட்டருக்கு சென்றேன். 20 நிமிடத்திற்கு மேல் படம் பார்க்க முடியவில்லை. எழுந்து வெளியே வந்துவிட்டேன். என் வாழ்க்கையில் நான் நடித்ததற்காக வருத்தப்படும் ஒரே படம் அர்ஜூன் ரெட்டி தான் . என் மனைவி இந்தப் படத்தைப் பார்த்திருந்தால் என்னை திட்டியிருப்பார்” என்று அவர் கூறியிருந்தார்.
தன் படத்தை விமர்சனம் செய்த ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் திருப்பி விமர்சித்து வந்த இயக்குநர், ஆதில் ஹுசைனின் பேட்டியை பார்த்து எக்ஸ் தளத்தில் கடுமையாக விளாசித்துள்ளார். அவர் கூறியதாவாது, “நீங்கள் நம்பும் 30 ஆர்ட் படங்கள் மூலம் கிடைக்காத புகழ் நீங்கள் வருத்தப்படும் ஒரு பிளாக்பஸ்டர் படம் மூலம் கிடைத்திருக்கிறது. உங்களுக்கு passion-ஐ விட பேராசை தான் முக்கியம் என்பது தெரிந்தும் உங்களை என் படத்தில் நடிக்க வைத்ததற்கு வருத்தப்படுகிறேன். நீங்கள் வெட்கப்பட வேண்டாம். உங்களின் முகத்தை AI உதவியுடன் மாற்றிவிடுகிறேன். தற்போது நன்றாக ஸ்மைல் செய்யவும்” என்றார்.
சந்தீப் வாங்கா ரெட்டியின் ட்வீட்டை பார்த்தவர்கள் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆதில் ஹுசைன் ஏற்கனவே பிரபலமானவர் தான். உங்கள் படம் மூலம் ஒன்றும் அவர் பிரபலமாகவில்லை. வன்முறையை ஊக்குவிக்கும் படங்களை எடுப்பதை தவிர்க்கவும் என சிலர் தெரிவித்துள்ளனர்.