தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் ஒகேனக்கல் வனப்பகுதி பூர்வகுடி மக்களை, தமிழக வனத்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் ஒகேனக்கல் வனப்பகுதி பூர்வகுடி மக்களை, தமிழக வனத்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றும் செய்தியும் காணொளிகளும், மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. பூர்வகுடி மக்களின் உடைமைகளைத் தூக்கி எறிந்தும், கூரையைப் பிரித்து எறிந்தும், பெண்கள், குழந்தைகள் என்று கூடப் பாராமல், பலவந்தமாக வெளியேற்றியிருக்கின்றனர்.
மக்களின் பணத்தை ஊழல் செய்து கொள்ளையடிப்பவர்களையும், கள்ளச்சாராயம், போதை மருந்து கடத்துபவர்களையும் கண்டுகொள்ளாத திமுக அரசு, ஏழை எளிய மக்களின் மீது மட்டும் தங்கள் அதிகாரத்தைக் காட்டி மிரட்டி வருகிறது. வனப்பகுதி, பூர்வகுடி மக்களுக்கானது. அவர்களுக்கு முறையான வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுக்காமல், அதிகார துஷ்பிரயோகம் செய்து அகற்றும் திமுக அரசின் இந்த அடக்குமுறைக்கு, வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.