ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் பகுதியில் தனியார் நிறுவனத்தின் பேருந்துக்குள் பெண்ணை ஓட்டுநர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையினரின் கூற்றுப்படி, ”அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்கியிருக்கும் அந்த பெண், மாலை 6 மணியளவில் பேருந்துக்காக காத்திருந்துள்ளார். அப்போது, வெள்ளை நிறத்தில் நின்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் ஏறிக்கொண்டார். ஆனால், அந்தப் பேருந்தில், அந்த பெண்ணை தவிர வேறு எந்த பயணிகளுமே இல்லை. இதுகுறித்து நடத்துனரிடம் கேட்டபோது, வழியில் மேலும் சில பயணிகள் ஏறுவார்கள் என்று கூறியுள்ளார்.
பின்னர், சிறிது நேரத்தில் அந்த பெண் செல்லக்கூடிய வழிக்கு பதில், வேறுவழியில் பேருந்து சென்றுள்ளது. இதையடுத்து, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பேருந்தை நிறுத்திவிட்டு, அந்த பெண்ணை ஓட்டுநர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். நடத்துனர் பேருந்தின் அனைத்து ஜன்னல்களையும் மூடிவிட்டு, வேறு யாரேனும் வருகிறார்களா.? என்று வெளியே காவலுக்கு நின்றுள்ளார்.
பலாத்காரம் செய்யப்பட்ட பின், அந்த பெண்ணை மீண்டும் ஏற்றிய இடத்திலேயே இறக்கிவிட்டு, இதுபற்றி வெளியில் சொன்னால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டியுள்ளனர். ஆனால், அதையும் மீறி அந்தப் பெண் தைரியமாக போலீசில் புகாரளித்தார். பின்னர், அவர் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.
இந்த பேருந்து குர்கானில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் தொழிலாளர்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட ஓட்டுநர் ரோஷன் லால் (35) மற்றும் நடத்துனர் நான்ஹே ஆகியோர் விசாரணைக்குப் பின், உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.