அமலாக்கத்துறை முத்திரை குத்தப்படாத அரசியல் கட்சி என்றும் அதை பாஜக கூட்டணி கட்சியாகவே பார்க்கிறோம் என்றும் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
அமைச்சர் கே.என்.நேருவின் வீடு, மகன் அருண் வீடு மற்றும் நேருவின் சகோதரரர் ராவிச்சந்திரன் நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் உள்ள நிலையில், அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. இதனால், அவரது வீட்டின் முன்பு கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர்.
இந்நிலையில், சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் ரகுபதி, “டாஸ்மாக் சோதனை பற்றி 2016-21-ஆம் ஆண்டிற்கான பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும், அதைத்தொடர்ந்து சிலர் சொல்லி அன்றைக்கு டாஸ்மாக்கில் திடீரென்று ரெய்டு நடத்தப்பட்டது. ஆனால், என்ன தொகை? எவ்வளவு என்று எதுவுமே வெளியிடவில்லை. எவ்வளவு தொகை முறையீடு செய்யப்பட்டது என்பதெல்லாம் சொல்லவில்லை.
அன்றைக்கு ரூ.1,000 கோடி ஊழல் நடந்துள்ளதாக சொன்னார்கள். அதாவது, அண்ணாமலை என்ன சொன்னாரோ அதையே அமலாக்கத்துறையும் சொன்னது. இதையடுத்து, டெல்லி சென்று வந்த எடப்பாடி பழனிசாமி ரூ.1,000 கோடி என்றார். எங்களுடைய ஆட்சியில் டாஸ்மாக்கில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்பதை எங்களால் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும்.
அமலாக்கத்துறையும் முத்திரை குத்தப்படாத அரசியல் கட்சி. அதை பாஜக கூட்டணியாகவே பார்க்கிறோம். இதுபோன்ற சோதனைகளுக்கு எல்லாம் திமுக அஞ்சாது. அனைத்தயும் பார்க்க தயார் என சவால் விடுத்துள்ளார்.