தெலங்கானா மாநில பகுதியில் உள்ள ஹைதராபாத்தின் யூசுப்குட்டா பகுதியில் முகமது ரிஸ்வான் என்பவர், கடந்த 3 ஆண்டுகளாகவே ஸ்விகி என்ற நிறுவனத்தில் டெலிவரி பாய்யாக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி 11ஆம் தேதி பன்ஜாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கே சோபனா என்ற நபருக்கு ரிஸ்வான் உணவு டெலிவரி செய்ய சென்றுள்ளார். சோபனா வீட்டின் கதவை, ரிஸ்வான் தட்டியுள்ளார்.
கதவை திறந்ததும் வீட்டுக்குள் இருந்த ஜெர்மன் ஷெபர்ட் ரக நாயானது ரிஸ்வான் மீது பாய்ந்து கடித்து தாக்கத் தொடங்கியுள்ளது. பதட்டத்தில் ரிஸ்வான் நாயிடம் இருந்து தப்ப முயன்று ஓட்டம் பிடித்துள்ளார்.
அப்போது, நாய் தொடர்ந்து துரத்தவே தப்பிக்க வேறு வழி தெரியாமல் 3ஆவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதனால் ரிஸ்வானுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் ரிஸ்வன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து 4 நாள்கள் சிகிச்சை பெற்ற நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து ரிஸ்வானின் குடும்பத்தார் கொடுத்த புகாரின் பேரில் நாய்யின் உரிமையாளர் மீது இபிகோ 304(A) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.