மாவீரன், கேப்டன் மில்லர் படத்தை அதிக தொகைக்கு பிரபல ஓடிடி நிறுவனம் வாங்கியுள்ளது.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் தனுஷ் நடிக்கிறார். அருண் மாதேஸ்வர்ன் இதற்கு முன்பு ஆரண்ய காண்டம், ராக்கி, சாணி காயிதம் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். இவரின் திரைப்படங்கள் தனித்துவமாக இருப்பதால், ரசிகர்களின் கவனத்தை பெற்றது. தற்போது தனுஷை வைத்து அருண் மாதேஸ்வரன் இயக்கும் ’கேப்டன் மில்லர்’ படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில், இந்தப் படத்தை சத்யஜோதி நிறுவனம் சார்பில் தியாகராஜன் தயாரிக்கிறார். கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கிய நிலையில், டிஜிட்டல் உரிமத்தை பெரும் தொகைக்கு விற்பனை செய்துள்ளனர். குறிப்பாக, இந்த திரைப்படத்தின் வெளியீட்டுக்கு பிறகான ஓ.டி.டி. உரிமத்தை அமேசான் நிறுவனம் 38 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது.
அதேபோல் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ’மாவீரன்’ திரைப்படத்தை 34 கோடி கொடுத்து கைப்பற்றியுள்ளது. மாவீரன் படத்தை மடோனா அஸ்வின் இயக்குகிறார். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு யோகி பாபு நடிப்பில் வெளியான ’மண்டேலா’ படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் அனைவரின் பாராட்டுக்களை பெற்றதோடு தேசிய விருதையும் தட்டிச் சென்றது. இதுவரை தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரின் திரைப்படங்கள் திரையரங்கு வெளியீட்டுக்கு பிறகு உரிமத்தில் இந்த அளவிற்கு விற்பனையானதில்லை. கேப்டன் மில்லர், மாவீரன் ஆகிய படங்கள் முதன் முறையாக அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.