திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கீழ்அய்யம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (40). இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். செந்தில் குமாரின் மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில், செந்தில்குமாருக்கு 16 வயதில் மகள் ஒருவர் உள்ளார். இவர் பள்ளியில் பயின்று வருகிறார். மாணவியுடன் தற்போது அவர் தந்தை மட்டுமே உள்ளார். இந்நிலையில், வீட்டில் தனியாக இருக்கும்போது, அவரது 16 வயது மகளை செந்தில்குமார் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் உன்னை கொன்று விடுவேன் என மகளை மிரட்டியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இதுபோன்ற அத்துமீறலும், வன்கொடுமையும் தன்னுடைய தந்தை மூலம் நடப்பதால் அதிர்ச்சியடைந்த சிறுமி, தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அந்த சிறுமியை காப்பாற்றியுள்ளனர். அப்போது, சிறுமி அவர்களிடம் தந்தையே தன்னிடம் தவறாக நடக்க முயற்சிப்பது குறித்து கதறி அழுதுள்ளார். இதற்கிடையே, கடந்த (4.5.2022) அன்று ஆரணி மகளிர் காவல்நிலையத்தில் சிறுமி அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர்.
மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் வரும் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் அரசு சிறப்பு பொது வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு அளித்தார். அதில், மகளிடம் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக செந்தில்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும், சிறுமியை கொலை செய்வதாக அச்சுறுத்திய குற்றத்துக்காக கூடுதலாக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும், அதை செலுத்த தவறினால் கூடுதலாக 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்தார்.
அதைத்தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த செந்தில்குமாரை, காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மகளிடம் தவறாக நடக்க முயன்ற தந்தைக்கு போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனை விதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.