கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.
கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துமனையில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 9-ம் தேதி அவரின் உடல் கல்லூரி மருத்துவமனையில் கண்டெடுக்கப்பட்டது. அப்போது குடும்பத்தினரை தொடர்பு கொண்ட மருத்துவமனை நிர்வாகம், பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தது. பின்னர் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரிய வந்தது.
கல்லூரி முதல்வர் சந்தீப் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த சில மணி நேரத்தில் மேற்கு வங்க அரசு அவரை வேறு கல்லூரியின் முதல்வராக நியமனம் செய்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் மருத்துவமனை இயக்குநர் பதவியில் இருந்து சந்தீப் கோஷை உடனடியாக நீக்க உத்தரவிட்டது. வேறு எந்த அரசு மருத்துவக் கல்லூரியிலும் அவரை இயக்குநராக நியமிக்கக் கூடாது என்றும் உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டு உள்ளது. இதன்பிறகு தலைமறைவாக இருந்த சந்தீபை கடந்த வெள்ளிக்கிழமை சிபிஐ அதிகாரிகள் பிடித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. பாலியல் வன்கொடுமையும் நடந்ததற்கு மருத்துவ ரீதியிலான ஆதாரம் உள்ளது. பிறப்பு உறுப்பில் இருந்த 151 கிராம் திரவம் மற்றும் ரத்த மாதிரி ஆகியவை பரிசோதனைக்காக அனுப்பப் பட்டுள்ளன. கையால் கழுத்தை நெரித்ததில் மூச்சு திணறி அவர் உயிரிழந்ததாகவும் உடலின் உள்ளே 9 இடங்கள், வெளியே 16 இடங்களில் காயம் இருந்ததாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.