நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் பலரும் புதிய ஆடைகள், பட்டாசுகள், இனிப்புகள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க அரசியல் கட்சியினர் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.
அந்த வகையில், கோவை ரயில் நிலையம் பகுதியில் கோவை மாநகர் மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் “விடியலின் ஒளி வந்தது! தினம் தினம் திருநாள் தந்தது!” என்ற வாசகங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் புகைப்படங்களுடன் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
அதேபோல் திமுக போஸ்டர்களுக்கு அருகிலேயே ‘2026 கப்பு முக்கியம் பிகிலு’ என்ற வாசகங்களுடன் விஜய் ரசிகர்களும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில் “களமும் நமதே! காலமும் நமதே! 2026 கப்பு முக்கியம் பிகிலு என்ற வாசகமும், மற்றொரு போஸ்டரில் “கப் முக்கியம் பிகிலு ஸ்வீட் எடு! தீபாவளி கொண்டாடு” என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.