சென்னையை சேர்ந்தவர் வேணுகுமார். இவரது மனைவி வனிதா. இந்த தம்பதி இருவருக்குமே இது 2ஆம் திருமணம். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. வேணுகுமார் குடிப்பழக்கம் உள்ளவர். இவர், ஒருநாள் மனைவி வனிதாவிடம் இடியாப்பம் செய்து தரும்படி கேட்டுள்ளார். ஆனால், வீட்டில் இடியாப்ப குழல் இல்லை. இதனால், இடியாப்பம் செய்ய முடியாது என்று மனைவி கூறியுள்ளார்.
இதனால், தனது மனைவியிடம் சண்டையிட்டு அடித்து தாக்கியுள்ளார் வேணுகுமார். இதையடுத்து, வனிதா போலீசில் புகாரளித்தார். விசாரணையின்போது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் திருமணம் முடிந்த காலத்தில் இருந்தே துன்பங்களை அனுபவித்து வருவதாக வனிதா கூறினார். இந்நிலையில், வீட்டில் தொடர்ந்து பிரச்சனை உருவாகியதால் மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சிகள் பலனளிக்கவில்லை. கடந்த 2018இல் தான் ஆசையாய் அவரது பிறந்தநாளுக்கு ‘காப்பி கப்’ வாங்கி கொடுத்ததை சிகரெட் சாம்பல் கொட்டும் குவளையாக பயன்படுத்தி எனது உணர்வுகளை புண்படுத்தினார் என்று மனைவி கூறியுள்ளார்.
இதனை மறுத்த கணவர் “தனக்கு வீட்டில் உணவு சமைத்து தருவது கிடையாது. இதனால் அடிக்கடி வெளியே சாப்பிட்டதாக கூறினார். மேலும், அடிக்கடி தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியதாகவும், தனது சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்வதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் நீதிபதி “எதிர்மனு தாரரான வேணுவிடம் எதுவும் இல்லாத நிலையில் மனுதாரர் சொத்துக்களை எப்படி அபகரிக்க முடியும்? எதிர்மனுதாரர் தனது பொருளாதார நிலைமையை மறைத்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு உணர்வு ரீதியாக துன்புறுத்தி குடும்ப வன்முறைக்கு ஆளாக்கியது தெளிவாகிறது” என்று கூறி வனிதாவுக்கு இழப்பீடாக ரூ.20 லட்சம் வழங்கும்படி உத்தரவிட்டார்.