திருமங்கலம் முகமதுஷாபுரம் தேவர் தெருவில் வசிப்பவர் மாணிக்கம்(28). இவர் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி இந்துமதி. இந்துமதி இரவு 7 மணி அளவில் லேப்டாப் சார்ஜ் இல்லாததால் லேப்டாப்பிற்கு சார்ஜ் போட்டு விட்டு மெத்தையில் வைத்துள்ளார்.
அப்போது மின்கசிவினால் திடீரென லேப்டாப் சார்ஜர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நொடிப்பொழுதில் மளமளவென தீ எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த இந்திராணி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து விட்டார். அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயை அணைக்க முயன்றனர் ஆனால் தீ வேகமாக எரிய தொடங்கியதால் தீயை அணைக்க முடியவில்லை. உடனடியாக திருமங்கலம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
திருமங்கலம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின. லேப்டாப் சார்ஜ் போடும்போது திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் வீடு முழுவதும் இருந்த பொருட்கள் எரிந்து நாசமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.