போர்ச்சுகலில் உள்ள Sao Lorenco de Bairro என்ற சிறிய நகரத்தின் தெருக்களில் மழை வெள்ளம் போல சிவப்பு ஒயின் ஆர்பரித்து ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sao Lorenco de Bairro நகரத்தில் உள்ள செங்குத்தான மலையிலிருந்து கோடிக்கணக்கான லிட்டர் ஒயின் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தெருக்களில் வழிந்தோடியுள்ளது. இதனை அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் திகைத்துப் பார்த்துள்ளனர். சிவப்பு ஒயின் பெருக்கெடுத்து ஓடிய காட்சியை அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நியூயார்க் போஸ்ட்டை பொறுத்தவரை, இந்த ஒயின் நதியானது சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள மதுவகைகளைத் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அங்கு 2 மில்லியன் லிட்டருக்கும் அதிகமான சிவப்பு ஒயின் உள்ளடக்கிய பீப்பாய்களை கொண்ட தொட்டிகள் எதிர்பாராத விதமாக வெடித்ததால், இந்த வெள்ளம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
அதுமட்டுமின்றி, இத்தனை மில்லியன் லிட்டர் ஒயின் பெருக்கெடுத்து ஓடி, சுத்தமான ஆற்றுக்குச் சென்று கலந்துவிட்டதால் சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் கிளப்பும் அபாயம் உள்ளதாக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். இந்த ஒயின் வெள்ளப்பெருக்கால் பல வீடுகளிலும் சிவப்பு ஒயின் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அங்குள்ள செர்டிமா என்ற நதி தற்போது ‘மது நதி’-ஆக மாறிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த ஒயின் வெள்ளத்தைத் தடுக்க தீயணைப்புத் துறையினரும் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன் விளைவாக, வெள்ளம் திருப்பிவிடப்பட்டு, அருகிலுள்ள வயல்வெளியில் விடப்பட்டது என்று நியூயார்க் போஸ்ட் அறிக்கை மூலம் தெரியவந்ததுள்ளது. இருப்பினும் திடீரென ஏற்பட்ட விபரீதத்தால் அருகிலுள்ள நதியில் ஒயின் பலமடங்கு கலந்தது.
இந்த பெரும் விபரீதம் ஏற்பட காரணமாக இருந்த லெவிரா என்ற மதுபான தயாரிப்பு தொழிற்சாலை மன்னிப்புக் கேட்டு, நகரத்தில் மதுவால் பாதிக்கப்பட்ட நிலங்களை மீட்டுத் தருவதாக உறுதியளித்துள்ளது. அதுமட்டுமின்றி, சுத்தம் செய்தல் மற்றும் சரிசெய்வது தொடர்பான செலவுகளுக்கும் தாங்களே முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளது.