தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் உள்ள லால் பஜார் என்ற பகுதியில் 15 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர், அதே பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில், இவரது பெற்றோர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தனர். இதனால் இந்த சிறுமி மற்றும் அவரது தம்பி ஆகியோர் தனியாக இருந்த நிலையில், மீர்பேட்டை பகுதியிலுள்ள உறவினர் ஒருவர், இருவரையும் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு சிறுமி துணி கடையிலும், சிறுவன் பிளக்ஸ் போர்டு வைக்கும் இடத்திலும் பணிபுரிந்து வந்துள்ளனர். சிறுமி தினமும் கடைக்கு சென்று வருவதை ஒரு கும்பல் கவனித்து வந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று மாலை நேரத்தில் சிறுமி வழக்கம்போல் வீடு திரும்பியுள்ளார். வீட்டில் அவர்களது உறவினர் இல்லை என்பதால், சகோதரர் பக்கத்துக்கு வீட்டு சிறுவர்களுடன் விளையாடியுள்ளார். அப்போது அங்கே வந்த அந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல், சிறுவர்களை கத்தியை காட்டி மிரட்டியதோடு, அதில் 3 பேர் சிறுமியை மாடிக்கு தூக்கிச் சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அந்த கும்பல் யார் என்பது குறித்து தேடி வந்த நிலையில், அதில் 6 பேரை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.