கள்ளக்காதலியை பழக வைத்து, தொழிலதிபரிடம் பணம் பறித்த வழக்கில் பெண் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த கானகோயில்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (40). இவர், மறைமலை நகர் அடுத்த மகேந்திரா சிட்டி பகுதியில் பல்வேறு தனியார் தொழிற்சாலைகளுக்கு, தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அனுப்பும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், இவர் தொழிலாளர்களின் பிஎஃப் பணத்தை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து, தொழிலாளர்கள் சிலர் பிரபாகரன் (32), கன்னியப்பன் (26) ஆகியோரிடம் கூறியுள்ளனர். இதைப் பயன்படுத்திக் கொண்ட அந்த இருவரும், பாஸ்கரை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர். மேலும், இதுகுறித்து இருவரின் நண்பரான பிரசன்ன பாலாஜி (36) என்பவரிடம் கூறினர். ஆனால், அவரோ தனது கள்ளக்காதலியான அழகுக்கலை நிபுணர் ரஞ்சிதா (24) என்பவரிடம் கூறி பாஸ்கரின் செல்போன் எண்ணைக் கொடுத்து அவரிடம் நட்பாக பழகும்படி கூறியுள்ளார். அதன்பின்னர் பணம் பறிக்கவும் அந்த கும்பல் திட்டம் போட்டுள்ளது.
அதன்படி, ரஞ்சிதாவும் பாஸ்கரிடம் அடிக்கடி செல்போனில் பேசி பழகி வந்துள்ளார். மேலும், இருவரும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பல இடங்களுக்கும் சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி பாஸ்கரை செல்போனில் அழைத்த ரஞ்சிதா, சென்னேரி பகுதியில் காத்திருப்பதாகவும், தன்னை வந்து அழைத்துச் செல்லுமாறும் கூறியுள்ளார். பாஸ்கரும் தனது பைக்கில் வந்து, ரஞ்சிதாவை அழைத்துக் கொண்டு சிறுங்குன்றம் வனப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு தனியாக இருவரும் பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது, காரில் வந்த கள்ளக்காதலன் பிரசன்ன பாலாஜி, பிரபாகரன், கன்னியப்பன் ஆகிய 3 பேரும் அங்கு சென்று பாஸ்கர் மற்றும் ரஞ்சிதா ஆகிய இருவரையும் மடக்கி பிடித்து பாஸ்கரிடம் இருந்த 2 செல்போன்கள், ரூ.28 ஆயிரம் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
மேலும், இதை வெளியே சொன்னால் நீ இந்தப் பெண்ணுடன் இருந்த வீடியோ, போட்டோக்களை வெளியிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதையடுத்து, அங்கிருந்து மீண்டு வந்த பாஸ்கர், இச்சம்பவம் குறித்து திருப்போரூர் போலீசாருக்கு தகவல் அளித்ததின் பேரில், பாஸ்கரின் செல்போன் எண்ணை போலீசார் சோதனை செய்தனர். மேலும், ஏற்கனவே ரஞ்சிதாவுடன் பிரசன்ன பாலாஜி தொடர்பில் இருந்ததும், கன்னியப்பன் மற்றும் பிரபாகரன் ஆகியோர் செல்போனில் பாஸ்கரிடம் பேசி இருந்ததும் தெரியவந்தது. இதனால், போலீசார் 4 பேரையும் பிடித்தனர். பணம் பறிக்கும் நோக்கில் திட்டம்போட்டு பெண்ணை பழகவைத்து செயல்பட்டதும் விசாரணையில், அம்பலமானது. மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரசன்ன பாலாஜி (36), ரஞ்சிதா (24), பிரபாகரன் (32), கன்னியப்பன் (26) ஆகிய 4 பேரையும் கைது செய்துனர். அவர்களிடமிருந்து ஒரு கார், ஒரு பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.