இந்தியாவில் சுமார் 17 கோடி பேரின் அந்தரங்க தகவல்களை இணையம் மூலமாகத் திருடி விற்பனை செய்த கும்பலை ஐதராபாத்தின் சைபராபாத் போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தரவு கசிவு காரணமாக உளவு பார்ப்பதற்கும், தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் அபாயம் உள்ளது என்று சைபராபாத் போலீஸ் கமிஷனர் ஸ்டீபன் ரவீந்திரா கூறியுள்ளார். இந்த கும்பல் திருடப்பட்ட தனிநபர்களின் தரவை 140 வெவ்வேறு வகைகளில் பகிர்ந்துகொள்வதாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அவர், மாணவர்கள், தொழிலதிபர்கள், வங்கிப் பயனர்கள், அரசு ஊழியர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள், தனியார் வல்லுநர்கள் ஆகிய பல பிரிவினரின் தரவுகள் திருடப்பட்டுள்ளன என்றும் அவை பாலின வாரியாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றும் ரவீந்திரா தெரிவித்துள்ளார். ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையைச் சேர்ந்த பணியாளர்கள் உட்பட நாடு முழுவதும் சுமார் 16.8 கோடி பேரின் தனிப்பட்ட மற்றும் ரகசியத் தகவல்களைத் திருடி விற்பனை செய்துள்ளனர்.
டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் இயங்கிவரும் Data Mart Infotech, Global Data Arts, MS Digital Grow போன்ற பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத நிறுவனங்களுடன் தொடர்புடைய 6 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் இவர்கள் பாதுகாப்புப் பணியாளர்களின் விவரங்கள், மொபைல் எண்கள், நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் பற்றிய தகவல்கள், எரிசக்தி மற்றும் மின் துறையைச் சேர்ந்த ஊழியர்கள், பான் கார்டு வைத்திருப்போரின் விவரங்கள் போன்ற முக்கியமான தகவல்களை திருடி விற்பனை செய்துள்ளனர் என்றும் ரவீந்திரா கூறினார். மேலும், அரசு ஊழியர்கள், டீ-மேட் (D-MAT) கணக்குகள், காப்பீடு, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு வைத்திருப்போரின் தகவல்கள், (Axis, HSBC உள்ளிட்ட பல வங்கிகள்), Whatsapp, Facebook பயனர் விவரங்கள், ஐடி ஊழியர்கள், விமானம் ஓட்டுபவர்கள் குறித்த தகவல்கள் போன்றவற்றை ஜஸ்ட் டயல் (JUST DIAL) மற்றும் அதேபோன்ற தளங்கள் மூலம் விற்பனை செய்துவந்துள்ளது தெரியவந்துள்ளது.