11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று முதல் மார்ச் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான 12-ம் பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று முதல் மார்ச் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் நாளில் தமிழ் உட்பட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,302 தேர்வு மையங்களில் 8.25 லட்சம் பேர் எழுத உள்ளனர். இதில் 7,534 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 20,207மாணவர்கள், 5,000 தனித்தேர்வர்கள் மற்றும் 187 சிறை கைதிகளும் உள்ளனர்.
பொதுத்தேர்வுக்கான அறைக்கண்காணிப்பாளர் பணியில் 46,700ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், முறைகேடுகளை தடுக்க 4,334 நிலையான மற்றும்பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வறைக்குள் செல்போன் உட்பட மின்சாதனம் கொண்டுவர தடை உள்ளது. ஹால்டிக்கெட்டில் உள்ள விதிகளை பின்பற்றி மாணவர்கள் நடக்க வேண்டும். விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனா கொண்டு மட்டுமே எழுத வேண்டும். எக்காரணம் கொண்டும் கலர் பென்சில், பேனா கொண்டு எழுதக்கூடாது.
அதேபோல், விடைத்தாளில் சிறப்பு குறியீடு, தேர்வு எண், பெயர் ஆகியவற்றை குறிப்பிடக் கூடாது. மாணவர் புகைப்படம், பதிவெண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புத்தாள் விடைத்தாளுடன் சேர்த்து வழங்கப்படும். அதை சரிபார்த்து மாணவர்கள் கையொப்பமிட்டால் போதும். மேலும், அறை கண்காணிப்பாளரே விடைத்தாள்களை பிரித்து வைக்க வேண்டும்.