மதுரையில் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து, அதை ஆண் நண்பருக்கு அனுப்பிய விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்தவர் ஆசிக் (வயது 31). இவர் MBBS படித்து முடித்துவிட்டு கமுதியில் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். ஆசிக்கிற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், இவரது கிளினிக் அருகேயுள்ள காளீஸ்வரி என்பவர் மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி, பி.எட்., படித்து வருகிறார். ஆசிக்கும், காளீஸ்வரியும் நீண்ட நாட்களாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில், காளீஸ்வரி தன்னுடன் தங்கியுள்ள விடுதி பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் பிடித்து ஆசிக்கிற்கு அனுப்பி வந்துள்ளார். மேலும், பெண்கள் உடை மாற்றும் காட்சிகள் மற்றும் புகைப்படங்களையும் அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து தெரியவந்ததும் விடுதி பெண் ஒருவர், விடுதி காப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். பின்னர் காளீஸ்வரியின் செல்பேனை பார்த்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, விடுதியின் மேலாளர் மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். அதன்பேரில், சைபர் கிரைம் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் செல்போனில் பெண்கள் குளியல் காட்சிகள் மற்றும் உடைமாற்றும் காட்சிகள் பகிரப்பட்டது தெரியவந்தது. பின்னர் ஆசிக் மற்றும் காளீஸ்வரியை போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலம் சண்டிக்கரில் பல்கலைக்கழக விடுதியில் மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்து தனது ஆண் நண்பருக்கு அனுப்பிய சக மாணவியை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல், மதுரையில் ஒரு சம்பவம் அரங்கேறியிருப்பது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.