உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் லூடோ சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண் பணமில்லாததால் தன்னையே பணயமாக வைத்து தோற்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
லூடோ என்ற சூதாட்டம் இந்தியாவில் மிகவும் பிரபலமான பலகை விளையாட்டுகளில் ஒன்றாகும். பகடைகளை உருட்டுவதும், காய்களை நகர்த்துவதும், அந்தந்த நிறத்தின் வீட்டை அடையும் வகையில் விளையாடுவது ஆகும். ஆன்லைனில் கூட இதை விளையாட வசதி வந்துவிட்டது. இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் ஒரு பெண் தாயவிளையாட்டுக்கு அடிமையாகி தன்னைத்தானே அடகுவைத்து விளையாடியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள நாகர்கோட்வாலி அருகே அமைந்துள்ளது தேவ்கலி என்ற கிராமம். இங்கு ரேணு என்ற பெண் ஒருவர் தனது கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். வீட்டில் தனியாக இருந்த மனைவி தனது கணவர் சம்பாதித்துக் கொடுக்கும் பணத்தை வைத்து தனது வீட்டின் உரிமையாளருடன் ‘லுடோ’ விளையாடி வந்துள்ளார். இப்படியே பணத்தை முழுவதும், சூதாட்டத்தில் தொலைத்த அந்த பெண், இறுதியாக தன்னையே பணயமாக வைத்து விளையாடி வந்துள்ளார். அப்போதும் இவர் தோற்றதால், வீட்டின் உரிமையாளருடன் செல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டார்.
அந்த விளையாட்டில் தோற்றுவிட அவர் வீட்டின் உரிமையாளருடனேயே வாழ ஆரம்பித்து விட்டார். இது தொடர்பாக கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், “எனது மனைவி லுடோவில் தோற்றதால், எதிராக விளையாடியவருடன் சென்று விட்டதாகவும் தயவுசெய்து எனது மனைவியை மீட்டு தாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சூதாட்டத்தில் மூழ்கி பெண் தன்னையே பறிகொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.