தமிழகம் முழுவதும் இன்று கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினமான இன்று கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும். காலை 11 மணி அளவில் கூட்டத்தில் ஊராட்சிகளின் 2022-23-ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, மத்திய மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், குழந்தைகள் மற்றும் முதியோர் உதவி எண் மற்றும் இளைஞர்களுக்கான திறன் பயிற்சி உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
இவ்வாறான கிராம சபைக் கூட்ட விவாதங்கள், பயனாளிகள் தேர்வுகளில் ஈடுபடுதல் மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்வது, அவ்வூராட்சியில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களின் முக்கிய கடமையாகும். மேலும் கிராம சபைகளில் பொதுமக்கள் கலந்து கொள்ளும்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.