குஜராத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் தனது 27 வார கருவை கலைக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஆகஸ்ட் 19 தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாலியல் வன்கொடுமை காரணமாக கர்ப்பமான பெண்ணின் கருவை கலைக்க அனுமதி மறுத்த குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், ஆகஸ்ட் 8ம் தேதி குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் உரிய உத்தரவு பிறப்பிக்காமல் தாமதம் செய்தது ஏன்?. புதிய மருத்துவக் குழுவை உடனடியாக அமைத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்து, அதன் அறிக்கையை 20-8-23 அன்று தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் அன்றைய தினமே குஜராத் உயர் நீதிமன்றம், பெண்ணின் கருவை கலைக்க அனுமதி மறுத்து தீர்ப்பு வெளியிட்டது. இந்த சூழலில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நீதிபதிகள் நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘குஜராத் உயர் நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது? உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இந்தியாவில் எந்த நீதிமன்றமும் உத்தரவு பிறப்பிக்க முடியாது. இது அரசியலமைப்புக்கு எதிரானது.
மற்ற வழக்கை போல இந்த வழக்கை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்திருக்கிறது என்பது சொல்வதற்கே வேதனையாக இருக்கிறது. மருத்துவ அறிக்கையின் பரிந்துரை அடிப்படையில் மனுதாரரின் 28 வார கருவை கலைக்க அனுமதிக்கிறோம். அதே சமயம், கரு உயிருடன் இருந்தால் அதனை மருத்துவமனையில் பராமரித்தல் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் அளித்து, அந்த குழந்தையை குஜராத் மாநில அரசே தத்தெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.