சமீபத்தில் எத்தனை என்கவுண்டர்கள் நடத்துள்ளன..? என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த சத்யஜோதி என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தனது சகோதரர் வெள்ளைக்காளி தற்போது சென்னை புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வருவதாகவும், அவர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்படும் அபாயம் இருப்பதாகவும், இதனால், வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் அவரிடம் விசாரனை நடத்த வேண்டும் என அவரது சகோதரி மனுதாக்கல் செய்திருந்தார்.
இதுதொடர்பான வழக்கு நேற்று (ஏப்ரல் 17) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தனபால், காவல்துறையினர் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்வதாக குற்றம்சாட்டினார். சமீப காலமாகவே காவல்துறையினர் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வதாகவும், அண்மையில் எத்தனை என்கவுண்டர்கள் நடந்துள்ளன? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினர்.
மேலும், காவல்துறையினரின் பாதுகாப்புக்காக மட்டும்தான் துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதி, குற்றவாளிகளை சுட்டுப்பிடியுங்கள். ஆனால், காலுக்குக் கீழே சுட்டுப்பிடியுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2 போலீசாரை ரவுடிகள் கொலை செய்துவிட்டதாக தெரிவித்தார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி தனபால், வழக்கின் விசாரணையை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்த வழக்கு, என்கவுண்டர் குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ள நிலையில், நீதிமன்றத்தின் கருத்துக்கள் காவல்துறையினரின் நடவடிக்கைகளுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.