கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கூடுதலாக மாணவர்களை சேர்ப்பதற்கு உயர்கல்வித்துறை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியதாவது; 2022-2023-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி விகிதம் சீராக உள்ளது. ஆனாலும், மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பம் செய்துள்ளதால், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், கலைப் பாடப்பிரிவுகளில் 20 சதவீதம் கூடுதலாகவும். அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிக்கு ஏற்ப 20 சதவீதம் கூடுதலாகவும் மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் இந்த கூடுதல் மாணவர்கள் சேர்க்கைக்கு கல்லூரிகள் அந்ததந்த பல்கலைக் கழகங்களின் அனுமதி பெற வேண்டும்.
அதேபோல் அரசு உதவிப் பெறும் கல்லூரிகளில் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் 15 சதவீதமும், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் 10 சதவீதமும் மாணவர்களை சேர்க்க அனுமதிக்கப்படுகிறது. அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் கூடுதலாக மாணவர்களை சேர்ப்பதால் கூடுதலாக பணியிடங்களை கேட்க கூடாது. கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அந்ததந்த பல்கலைக் கழகங்களின் அனுமதியை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.