வேங்கைவயல் சம்பவத்தில் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாமென்று தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், சிலர் அந்த தண்ணீரை குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மேலும், நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறிப் பார்த்தபோது, அதில் மலக்கழிவுகள் மிதப்பதாகவும், இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளிக்கப்பட்ட நிலையில், வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.
துணைக் காவல் கண்காணிப்பாளர் நிலையிலான அதிகாரியை புலனாய்வு அதிகாரியாக நியமித்து, புதுக்கோட்டை குற்ற எண்.01/2023-ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை மற்றும் பகுப்பாய்வுகளின் அடிப்படையில், ”சம்பவம் நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, அதாவது, 02.10.2022 அன்று நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அப்போது, முத்துக்காடு ஊராட்சித் தலைவர் பத்மா என்பவரின் கணவர் முத்தையா, ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றும் காவலர் முரளிராஜாவின் தந்தை ஜீவானந்தம் என்பவரை அவமானப்படுத்தும் விதமாகத் திட்டியுள்ளார். இதற்கு பழிவாங்கும் வகையில் முரளிராஜாவால் இச்செயல் திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்டது என்பது விசாரணையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் முரளிராஜா, சுதர்ஷன், முத்தையா, ஆர்.முத்துகிருஷ்ணன் மற்றும் பலரின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது, அதில் இந்தச் சம்பவம் தொடர்பான புகைப்படங்களும், உரையாடல்களும் அழிக்கப்பட்டிருந்தது. இந்தத் தகவல்கள் அனைத்தும் தொழில்நுட்ப உதவியோடு மீட்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில், அவர்களுக்குள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, புலன் விசாரணை முடிக்கப்பட்டு முரளிராஜா, சுதர்ஷன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் மீது 20.01.2025 அன்று நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இதுதொடர்பாக தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம்” என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.