2-வது மனைவியை 12 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஜார்கண்ட் மாநிலம் போரியா போலீஸ் எல்லைக்குட்பட்ட சாகிப்காஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் தில்தார் அன்சாரி. இவர் திருமணமானவர். இந்நிலையில் தான் தில்தார் அன்சாரிக்கும், பழங்குடியினத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ரூபிகா பகதீன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து தில்சார் அன்சாரி, ரூபிகாவை 2-வது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக ரூபிகா வீட்டில் இருந்து மாயமானார். இதுபற்றி தில்சார் அன்சாரி அவரது குடும்பத்தினரிடம் கூறினார். இதையடுத்து குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், பல இடங்களில் ரூபிகாவை தேடினர். மேலும் உறவினர்களிடமும், குடும்பத்தினரிடமும் விசாரித்தனர்.

இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தின் பின்புறத்தில் நாய் ஒன்று உடல் துண்டுகளை கவ்வி எடுத்து வந்தது. இதை பார்த்த கிராம மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த உடல் துண்டை கைப்பற்றி விசாரித்தனர். மேலும், அது மாயமான ரூபிகாவின் உடலாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதனால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதே சமயம், தில்கார் அன்சாரியின் வீட்டு சமையலறையில் ரத்தக்கறை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசாருக்கு தில்கார் அன்சாரி மீதான சந்தேகம் வலுத்தது. அவர் தான் ரூபிகாவை கொலை செய்து இருக்கலாம் என போலீசார் நினைத்தனர். இதனால், தில்கார் அன்சாரியை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதாவது தனது 2-வது மனைவியை கொலை செய்த தில்கார் அன்சார், அதன்பிறகு எலக்ட்ரிக் கட்டர் கொண்டு அவரது உடலை 12 துண்டுகளாக வெட்டியுள்ளார். பிறகு கொலையை மறைக்க சாந்தாலி மொமின் தோளா பகுதியில் உள்ள பழைய வீட்டுக்குள் உடலை வைத்துள்ளார். அவ்வப்போது உடல் துண்டுகளை ஆங்காங்கே வீசி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் வெளியே வீசப்பட்ட உடல் துண்டை நாய் கவ்வி வந்த நிலையில் அவர் போலீசில் சிக்கியது தெரியவந்துள்ளது. இருப்பினும் கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் தெரிவிக்கவில்லை. ரூபிகாவின் சில உடல் துண்டுகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இன்னும் சில பகுதிகள் கிடைக்கவில்லை. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.