மகாராஷ்டிர மாநிலம் மும்பையை அடுத்த பைகன்வாடி பகுதியைச் சேர்ந்தவர் விஷால் நாங்கிரே. இவரின் மனைவி கல்பனா. கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி இந்த தம்பதிக்கு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், கடந்த 18ஆம் தேதி திருமண நாள் என்பதால், கணவர் தனக்கு திருமண பரிசு கொடுப்பார் என்று காத்திருந்திருக்கிறார் கல்பனா. ஆனால், திருமண தேதியை மறந்த கணவர் விஷால், வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து கணவனிடம் சண்டை போட்டு இருக்கிறார். அதற்கு அடுத்த நாளும் வேலை முடித்துவிட்டு வந்து வீட்டிற்கு வெளியே தனது வாகனத்தை விஷால் கழுவிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது, மேலும் ஆவேசம் அடைந்த கல்பனா தனது குடும்பத்தினருக்கு ஃபோன் செய்து விவரத்தை சொல்லி வரவழைத்துள்ளார்.
இதையடுத்து தனது தாய், சகோதரர்கள் வந்ததும் கணவனை அனைவரும் சேர்ந்து அடித்து உதைத்து இருக்கிறார்கள். பின்னர் அங்கிருந்து கணவரின் தாயார் வீட்டிற்கு சென்று அங்கேயும் இது குறித்து வாக்குவாதம் நடத்தி சண்டை போட்டுள்ளார். இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று அப்போது மாமியார் கல்பனாவின் கன்னத்தில் அடித்திருக்கிறார். இதில் பிரச்சனை பெரிதாகி இருக்கிறது. உடனே, இனி விஷால் உடன் ஒன்றாக வாழ முடியாது என்று சொல்லிவிட்டு பிறந்த வீட்டிற்கே சென்றிருக்கிறார் கல்பனா. அதன் பின்னர் விஷால், தனது மனைவி மற்றும் அவரது தாய், சகோதரர் ஆகியோர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.