மனைவியின் மீதான சந்தேகத்தால் அவரை கொலை செய்து வீட்டின் முன்பு புதைத்த சம்பவத்தில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் கொச்சி பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சீவன். இவருக்கும் ரம்யா என்ற பெண்ணுக்கு கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், திருமணமான நாள் முதலே இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையே, கடந்த 2021இல் ஆகஸ்ட் மாதம் ரம்யாவை காணவில்லை என அவரது கணவர் சஞ்சீவன் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால், ரம்யாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சஞ்சீவன் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதனை அவர்கள் போலீசாரிடம் தெரிவித்த நிலையில், தகுந்த ஆதாரங்கள் உள்ளிட்டவை இல்லாமல் போனதால் சஞ்சீவனை பெரிய அளவில் அப்போது விசாரிக்கவில்லை. இந்த சூழலில் தான் கடந்த கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மேலும் சில பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் மாநிலம் முழுவதும் விசாரணை மேற்கொண் வந்தனர். அப்போது காணாமல் போன பெண்களின் பட்டியலை எடுத்து இதுகுறித்து தீவிர விசாரணையிலும் இறங்கியுள்ளனர்.
அந்த சமயத்தில் தான் ரம்யா வழக்கையும் போலீசார் மீண்டும் விசாரிக்க தொடங்கினர். இது தொடர்பாக கணவர் சஞ்சீவனிடம் நடந்த விசாரணையின் போது அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது மனைவி ரம்யாவை கொலை செய்ததை சஞ்சீவன் ஒப்புக் கொண்டுள்ளார். விசாரணையில் வெளிவந்த தகவலின் படி, மனைவி ரம்யா மீது சஞ்சீவனுக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. பல்வேறு நிபந்தனை விதித்து அவரை தொல்லை செய்து வந்ததாகவும் தெரிகிறது. அப்படி இருக்கையில் 2021 ஆகஸ்ட் மாதம் ரம்யா மீது சந்தேகப்பட்டு அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார் சஞ்சீவன். அப்போது, ஆத்திராடைந்த சஞ்சீவன், மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ரம்யாவின் உடலை வீட்டு வாசலிலேயே புதைத்து விட்டு மனைவியை காணவில்லை என்றும் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில், சஞ்சீவன் கொடுத்த வாக்குமூலத்தை அடுத்து ரம்யாவின் உடல் புதைக்கப்பட்டிருந்த இடத்தை தோண்டிய போலீசார், அவரது எலும்புக்கூடுகளை மீட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.