மாறி வரும் வாழ்வியல் சூழல்கள், அதிகரிக்கும் நெருக்கடி, பரவும் நோய்கள் என தற்போதைய காலத்தில் குழந்தைகள் பிறப்பு விகிதம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் இருந்த சீனா, இந்த பிரச்சனைகளால் தற்போது பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. அதேபோல, ரஷ்யாவிலும் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக சரிந்து வருகிறது. பிரிட்டனிலும் இந்த பிரச்சனை தலைதூக்க தொடங்கியுள்ளது. மறுபுறம் இந்த பிரச்சனைகளை பயன்படுத்தி மகப்பேறு மருத்துவமனைகள், ஐவிஎஃப் சென்டர்கள் கொள்ளை லாபம் பார்த்து வருகின்றன.
அந்தவகையில், சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாத நபர் ஒருவர், தனது மனைவியை கர்ப்பமாக்க, தனது தந்தையின் விந்தணுவை பயன்படுத்தியுள்ளார். அதாவது, இங்கிலாந்தின் தெற்கு யார்க்ஷயர் பகுதியில் நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. சமீபத்தில் தெற்கு யார்க்ஷயர் பகுதியின் நகராட்சி நிர்வாகமான பார்ன்ஸ்லி மெட்ரோபாலிட்டன் போரோ கவுன்சில் கவனத்திற்கு, குழந்தையின் தந்தை குறித்த சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே, நகராட்சி கவுன்சில் உயர்நீதிமன்றத்தை நாடி குழந்தையின் உண்மையான தந்தையை கண்டறிய டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று வழக்கு தொடுத்திருந்தது. விசாரணையில் தனது தந்தையின் விந்தணுவை பயன்படுத்தியதை கணவர் ஒப்புக்கொண்டார். அதாவது மனைவியை கர்ப்பமாக்க வேறு ஒருவரின் விந்தணுவை வாங்க வேண்டும். அதற்கு பெருமளவில் தொகை செலவாகும். எனவே, அந்த தொகை இல்லாததால் தனது தந்தையின் விந்தணுவுடன், தனது விந்தணுவையும் கலந்து மனைவியின் கருமுட்டைக்குள் செலுத்தியுள்ளார். இப்படித்தான் அந்த குழந்தை பிறந்துள்ளது.
வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், குழந்தையின் உண்மையான தந்தை யார் என்பதை கண்டறிய டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டிய அவசியமில்லை. இந்த வழக்கை பொறுத்த வரை, குழந்தையின் தந்தை யார் என கேட்டு நகராட்சி கவுன்சில்தான் மனு தாக்கல் செய்திருக்கிறது. இது நகராட்சி கவுன்சிலுக்கு தேவையில்லாத வேலை. குழந்தையின் பெற்றோர்கள் வழக்கு தொடுத்திருந்தால், டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தலாம். மற்றபடி கவுன்சிலின் பேச்சை கேட்டு உத்தரவிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.