ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் 4 நண்பர்களுடன் ஒரு போட்டியில் ஈடுபட்டார். டிக்டாக்கில் 4 பேரும் லைவ் செல்ல வேண்டும். அதில் யாருக்கு அதிக பார்வையாளர்கள் வருகிறார்களோ, அவர்களே வெற்றியாளர் என்பதுதான் போட்டி. அதன்படி போட்டியும் தொடங்கியது. பாதிக்கப்பட்ட பெண் லைவ்-வில் பேசிக்கொண்டிருக்கும் போதே அவரின் கணவர் குறுக்கிட்டு அந்தப் பெண்ணை கன்னத்தில் அறைந்தார். அந்தப் பெண் சில நிமிடங்கள் அழுதது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த நிகழ்வு ஸ்பெயின் முழுவதும் பேசுபொருளாக மாறியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் தன் கணவர் மீது போலீசில் எந்தப் புகாரும் அளிக்கவில்லை. ஆனால், மனைவியை கணவன் அறைந்த சம்பவத்தை பெண்களுக்கு எதிரான வன்முறையில் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவரை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நீதிபதிகள்,”குற்றம்சாட்டப்பட்டவர் தன் மனைவியை பகிரங்கமாக ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தும் நோக்கத்துடன் அடித்திருக்கிறார். பாதிக்கப்பட்டவரிடமிருந்து புகார் எதுவும் தேவையில்லை. பாதிப்பு தெளிவாகத் தெரிந்தவுடன், அவர் தண்டிக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் அவரின் மனைவிக்கும் இடையே தகராறு நடந்தது காரணமாக தம்பதியினரின் வீட்டுக்கு போலீசார் அழைக்கப்பட்டதும் தெரியவந்திருக்கிறது. எனவே, குற்றவாளி மனைவியில் இருந்து 300 மீட்டர் அருகில் வர தடை விதிக்கப்படுகிறது. அல்லது அவருடன் 3 ஆண்டுகள் தொடர்பு கொள்ளவும் தடை விதிக்கப்படுகிறது. மேலும், குற்றவாளிக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து உத்தரவிடுகிறோம். இந்த காலகட்டத்தில் அந்த நபர் எந்த ஆயுதங்களையும். வாங்க தடை விதிக்கிறோம்” எனத் தீர்ப்பு வழங்கினர்.