கேரளாவில் மனைவியை வெட்டிக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவரை 17 ஆண்டுகளுக்குப் பின் காவல்துறையினர் கைது செய்தனர்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லா அருகே கோழஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ஜனார்தனன் நாயர் (75). இவர், போஸ்ட் மாஸ்டராக இருந்து ஓய்வு பெற்றவர். அவருக்கு திருமணமாகி ரமாதேவி (51) என்ற மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். பிள்ளைகள் இருவருக்கும் திருமணமாகி வேறு ஊர்களில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். ஜனார்தனன் நாயரும், ரமாதேவியும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். கடந்த 2006ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி ரமாதேவி வீட்டில் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில், இறந்து கிடந்தார்.
இதுகுறித்து ஜனார்தனன் நாயர் திருவல்லா போலீசுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, போலீசார் ரமாதேவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவல்லா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜனார்தனன் வெளியே சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தபோது மனைவி கொல்லப்பட்ட நிலையில், கிடந்ததாக போலீசிடம் கூறினார். சம்பவம் நடந்த சமயத்தில் இவர்களது வீட்டுக்கு அருகே ஒரு புதிய வீடு கட்டப்பட்டு வந்தது. நெல்லையைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவர் உள்பட ஏராளமான தொழிலாளர்கள் கட்டிட பணியில் ஈடுபட்டு வந்தனர்.
ரமாதேவியின் கொலைக்குப் பின்னர் சுடலைமுத்துவும், அவருடன் தங்கியிருந்த ஒரு பெண்ணும் மாயமானார்கள். இதனால் போலீசுக்கு அவர்கள் மீது சந்தேகம் எழுந்தது. இருவரையும் போலீசார் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த வழக்கு குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. குற்றப்பிரிவு போலீசின் விசாரணையும் முறையாக நடைபெறவில்லை என்று கூறி ஜனார்தனன் நாயர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனுவை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கிடையே, குற்றப்பிரிவு போலீசின் தீவிர விசாரணையில், சுடலைமுத்துவுடன் மாயமான பெண் தென்காசியில் பிடிபட்டார்.
அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது தான் ரமாதேவி கொலை குறித்த முக்கிய துப்புகள் கிடைத்தன. ரமாதேவிக்கும், ஜனார்தனன் நாயருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தததை தான் பலமுறை பார்த்ததாக அந்த பெண் கூறியுள்ளார். இதன் பிறகு தான் போலீசின் சந்தேகப் பார்வை ஜனார்தனன் நாயர் மீது விழுந்தது. இதுதொடர்பாக ஜனார்தனனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது தன்னுடைய மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை வெட்டிக்கொலை செய்ததாக ஜனார்தனன் நாயர் போலீசிடம் ஒப்புக்கொண்டார்.
விசாரணைக்குப்பின் போலீசார் ஜனார்தனன் நாயரை பத்தனம்திட்டா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் கொட்டாரக்கரை சிறையில் அடைக்கப்பட்டார். பெண் கொலை செய்யப்பட்டு 17 வருடங்களுக்கு பிறகு அவரது கணவர் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.