நாட்டில் 2021ஆம் ஆண்டில் மூத்த குடிமக்கள் கொலை செய்யப்படும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அம்பலமாகியுள்ளது.
இதுதொடர்பான அறிக்கையில், ”மூத்த குடிமக்கள் தொடர்புடைய 191 கொலை வழக்குகளில் கொலை செய்யப்பட்டவர்களில் 202 பேர் 60 வயதுக்கும் அதிகமானோர் ஆவர். தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு 1,686 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. கொலை செய்யப்பட்டவர்களில் 11.3 சதவீதம் பேர் மூத்த குடிமக்கள் ஆவர். இதேபோல் கடந்த 2019ஆம் ஆண்டில் 1,745 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தம் 1,572 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 173 பேர் மூத்த குடிமக்கள்.

2020ஆம் ஆண்டு 1,661 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் 1,484 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 177 பேர் மூத்த குடிமக்கள் ஆவர். கடந்த ஆண்டில் 1,686 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன நிலையில், அதில் 1,495 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 191 பேர் மூத்த குடிமக்கள் ஆவர். தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொலை வழக்குகள் பதிவாவது குறைந்துள்ளது. ஆனால், மூத்த குடிமக்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தமிழகத்துக்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரத்தில் கடந்த ஆண்டில் 2,142 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 181 மூத்த குடிமக்கள் கொலை செய்யப்பட்டனர்.

அதிகம் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 7-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உத்தரப்பிரதேசமும் (3,717 வழக்குகள்), பீகார் (2,799), மகாராஷ்டிரா (2,330), மத்தியப் பிரதேசம் (2,034), மேற்கு வங்கம் (1,884), ராஜஸ்தான் (1,786), தமிழ்நாடு (1,686) இடங்களில் உள்ளன. மூத்த குடிமக்கள் அதிகம் கொண்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். தமிழகத்தில் 13.6 சதவீதம் பேர் மூத்த குடிமக்கள் ஆவர். கேரளாவில் 16.5 சதவீதம் பேர் மூத்த குடிமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய புள்ளியியல் துறை வெளியிட்ட தகவல்படி இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.