சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள், பொதுமக்களை தாக்கி வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இந்நிலையில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே மாதா கோயில் தெருவில் கடந்த 18ஆம் தேதி சுந்தரம் என்ற முதியவர் ஒருவர் நடந்து சென்றார்.
அப்போது அங்கிருந்த மாடு ஒன்று திடீரென சுந்தரத்தை முட்டி தூக்கி வீசியது. இதில் தடுமாறி கீழே விழுந்த அவர் படுகாயமடைந்த நிலையில், மயக்கமடைந்தார். பின்னர், அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 10 நாட்களாக சுந்தரத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சுந்தரம் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சியும் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.