நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சரக்கத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல மாதங்களாக நடந்து வரும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி விளக்கம் அளிக்குமாறு 4 முறை தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸுக்கு தமிழ்நாடு காவல்துறை உரிய விளக்கம் அளிக்காததால் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993 ன் பிரிவு 13 இன் படி, பிப்ரவரி 23ஆம் தேதிக்கு முன்பு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
தவறும் பட்சத்தில் மார்ச் 1ஆம் தேதி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் முன்பு தேவையான அறிக்கையுடன் தமிழ்நாடு டிஜிபி ஆஜராக வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.