T20 series: இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்றதன் மூலம், சொந்த மண்ணில் அதிக டி20 தொடரை வென்ற அணிகள் பட்டியலில் தொடர்ந்து இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியும், மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்ற நிலையில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி நேற்று புனேயில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஷிவம் துபே இருவரும் தலா 53 ரன்கள் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக சாகிப் மக்மூத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தொடர்ந்து 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பென் டக்கெட் 39 ரன்களிலும், பில் சால்ட் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களைத் தொடர்ந்து ஆடிய கேப்டன் பட்லர் 2 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் ஆடிய ஹாரி புரூக் அதிரடியாக 51 ரன்களில் வெளியேறினார்.
இதையடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 166 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்திய அணியில் ரவி பிஸ்னோய் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த தொடரை கைப்பற்றியதன் மூலம், சொந்த மண்ணில் அதிக டி20 தொடரை வென்ற அணிகள் பட்டியலில் தொடர்ந்து இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. 2018/19 இல் ஆஸ்திரேலியாவிடம் தோற்றதற்குப் பிறகு அவர்கள் சொந்த மண்ணில் ஒரு தொடரையும் இழக்கவில்லை.
சொந்த மண்ணில் அதிக டி20ஐ தொடரை வென்ற அணிகள்:
1 – இந்தியா: 17 தொடர்கள், 2019 முதல் தற்போது வரை.
2 – ஆஸ்திரேலியா: 8 தொடர்கள், ஜனவரி 2006 முதல் பிப்ரவரி 2010 வரை
3 – தென்னாப்பிரிக்கா: 7 தொடர்கள், பிப்ரவரி 2007 முதல் அக்டோபர் 2010 வரை
4 – இந்தியா: 6 தொடர்கள், பிப்ரவரி 2016 முதல் நவம்பர் 2018 வரை
5 – நியூசிலாந்து: 6 தொடர்கள், டிசம்பர் 2008 முதல் பிப்ரவரி 2012 வரை.
Readmore: பட்ஜெட் தாக்கல் எதிரொலியா?. சிலிண்டர் விலை குறைந்தது!. எவ்வளவு தெரியுமா?