ஆப்ரிக்காவின் காங்கோவில் பரவி வரும் மர்ம நோயால் கடந்த சில நாட்களில் 53 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஒரு மர்மமான நோய் பரவி வருகிறது. இது சுகாதார நிபுணர்களிடையே கடும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. அறிகுறிகள் தென்பட்ட 48 மணி நேரத்திற்குள் நோயாளிகள் இறப்பது, அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 3 குழந்தைகள் வவ்வால் கறி சாப்பிட்டதாகவும், அதன்பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நோய் கடந்த 5 வாரங்களில் 50-க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்றுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பிப்ரவரி 16ஆம் தேதி ஈக்வடேர் மாகாணத்தில் உள்ள தொலைதூர கிராமங்களில் 431 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிகிறது. இந்த நோயின் அறிகுறிகளில் காய்ச்சல், வாந்தி மற்றும் உட்புற இரத்தப்போக்கு ஆகியவை அடங்கும். பெரும்பாலான நோயாளிகள் பாதிக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் உயிரிழக்கின்றனர்.
பிகோரோ மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் செர்ஜ் நாகலேபாடோ கூறுகையில், அறிகுறிகளுக்கும் இறப்புக்கும் இடையிலான குறுகிய இடைவெளி ஆபத்தானது என்று எச்சரித்துள்ளது. சில நாட்களுக்குள் வேகமாக அதிகரித்து வரும் இந்த தொற்றுநோய்கள், பொது சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. இதற்கான சரியான காரணம் தெரியவில்லை என்று உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இந்த மர்மமான நோயில் “ரத்தக்கசிவு காய்ச்சல்” அறிகுறிகளை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இவை பொதுவாக எபோலா, டெங்கு, மார்பர்க் மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற கொடிய வைரஸ்களுடன் தொடர்புடையவை ஆகும். இருப்பினும், சோதனைகளை நடத்திய பிறகு விஞ்ஞானிகள் இந்த அறியப்பட்ட வைரஸ்கள் தான் இதற்கான காரணம் என்பதை நிராகரிக்க முடிந்தது. இதனால் நோயின் சரியான தோற்றம் மற்றும் தன்மை இன்னும் தெரியவில்லை. பலரும் இது கொரோனா வைரஸாக இருக்குமோ என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், இது கொரோனாவாக இருக்க வாய்ப்பு குறைவு. அதை போன்ற அறிகுறிகள் கொண்ட காலநிலை காய்ச்சலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், ரத்த வாந்தி எடுப்பதுதான் உலக சுகாதார மையத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.