உலகளவில் நிலத்தடி நீரின் வெப்பநிலை அதிகரித்து வருவதாகவும், அதனால் எதிர்காலத்தில் நிலத்தடி நீர் இழப்பு அபாயம் உள்ளதாகவும் ஆய்வில் வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐஐடி காந்திநகர் சிவில் இன்ஜினியரிங் மற்றும் புவி அறிவியல் பேராசிரியர் விக்ரம் சாராய் தலைமையில், ஐதராபாத்தில் உள்ள தேசிய ஜியோபிசிகல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. களநிலவரம், செயற்கைகோள் தரவுகள் மற்றும் மாதிரிகள் ஆகியவற்றை பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த ஆய்வில் வட இந்தியா முழுவதும் 1951 முதல் 2021 வரை பருவமழைக் காலங்களில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) மழைப்பொழிவு 8.5 சதவீதம் குறைந்துள்ளதாகவும், அதே காலகட்டத்தில் குளிர்காலத்தில் 0.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
உலகம் முழுவதும் நீரால் சூழப்பட்டிருந்தாலும், அதில் நன்னீர் என்பது மிகவும் குறைந்த சதவீதமே உள்ளது. பல நாடுகளிலும் ஆறு, ஏரிகளில் ஏற்படும் நீர் வறட்சி காரணமாக நிலத்தடி நீரை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. ஆனால் உலக வெப்பமயமாதல் காரணமாக மெல்ல நிலத்தடி நீரின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளது.
மழைக்காலங்களில் குறையும் மழைப்பொழிவு, குளிர்காலத்தில் வெப்பம் அதிகரித்தல் ஆகியவை பாசன நீர் தேவையை அதிகரிப்பதோடு, நிலத்தடி நீர் சுரப்பதை குறைக்கிறது. இதன் காரணமாக ஏற்கனவே கடந்த 20 ஆண்டுகளில் வட இந்தியாவில் 450 கன கிமீ நிலத்தடி நீர் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய அணையான இந்திராசாகர் அணையின் மொத்த கொள்ளளவு நீரை விட 37 மடங்கு அதிகம். பருவநிலை மாற்றம் வரும் காலங்களில் நிலத்தடி நீர் இழப்பை இன்னும் மோசமாக பாதிக்கும் என்றும் ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நிலத்தடி நீர் சுரப்பதற்கு அதிக நாட்களுக்கு குறைந்த அளவிலான மழைப்பொழிவு தேவை என கூறியிருக்கும் ஆய்வாளர்கள் பருநிலை மாற்றத்தால் ஏற்படும் அதிகப்படியான மழைப்பொழிவு எந்த விதத்திலும் நீர் பிரச்னைக்கு தீர்வாக இருக்காது என கூறி உள்ளனர். எதிர்காலத்தில் நிலத்தடி நீரும் மனிதர்கள் குடிக்க இயலாததாக மாறும் அபாயம் உள்ளதாகவும், மேலும் நிலத்தடி நீரை சார்ந்துள்ள விவசாயம், உற்பத்தி ஆகியவை கடுமையாக பாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Read more | மகளிருக்கு கட்டணமில்லா பயணச் சலுகையால் போக்குவரத்துத் துறை உயிர்பெற்றுள்ளது..!! – அமைச்சர் சிவசங்கர்