அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய விவகாரத்தில் கைதானவரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை ஐகோர்ட் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்த டிசம்பர் 3ஆம் தேதி அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொள்ள சென்றார். மேலும், மக்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்க சென்றபோது, பொன்முடி மற்றும் அதிகாரிகளை ஆபாசமாக திட்டி சேற்றை வாரி வீசியதால் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.
இதுதொடர்பாக புகாரின் பேரில் இருவேல்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார். தற்போது, இவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், அமைச்சர் மீது அரசியல் உள் நோக்கத்துடன் சேறு வீசப்பட்டதால் ராமகிருஷ்ணனுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மனுதாரர் தரப்பில், இந்த சம்பவத்தில் எந்த அரசியல் உள் நோக்கமும் எதுவும் இல்லை என்று தெரிவித்தார். மேலும், புயல் பாதிப்பிற்கு நிவாரணம் எதுவும் உடனடியாக வழங்காததால், விரக்தியில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தார்.