fbpx

அன்னக்கிளி மூலம் பறக்க ஆரம்பித்த இசைக்கிளியின் பயணங்கள்… “மேஸ்ட்ரோ” பிறந்த தினம் இன்று…

தமிழர்களின் நாடி, நரம்பு, மூச்சு, பேச்சு, இரத்தம் எல்லாவற்றிலும் இரண்டற கலந்தது இசை. அப்படிப்பட்ட ரசிகர்களின் இதயம்தோறும் நிறைந்துள்ள இளைய ராஜாவின் பிறந்தநாள் இன்று.

ஃபேஸ்புக், யூடியுப், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் பெருங்கியுள்ள இந்த நவீன யுகத்தில், இளையராஜாவின் பாடல்கள் என்று தேடினால் பல லட்சம் பார்வைகளுடன் அந்த பாடல்கள் எண்ணிக்கையில் ஒரு சரித்திரத்தை படைத்து வருகிறது. பலர் இரவு நேரங்களில் தூங்குவதை விட்டுகூட இளையராஜாவின் பாடல்களை கேட்டு மன அமைதிகொள்கிறார்கள். தூக்கத்தால் உடலுக்கு வரும் அமைதியைவிட இளையராஜாவின் பாடல்களால், மனதிற்கு கிடைக்கும் அமைதிதான் பெரிது என்று பலரும் நினைக்கின்றனர். இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், நாள்தோறும் மக்கள் கேட்கும் இசையாக இளையராஜாவின் இசை இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

அன்னக்கிளி மூலம் பறக்க ஆரம்பித்த இளையராஜாவின் இசைக்கிளி எத்தனை காலம் ஆனாலும் பறந்துகொண்டேதான் இருக்கும். அப்படிப்பட்ட இசைஞானியின் பிறந்தநாள் இன்று.தனது அண்ணன் பாவலர் வரதராஜனுடன் மேடைகளில், நாடகங்களில் இசை மீட்டிக்கொண்டிருந்த ராசையாவின் திரையிசை அவதாரம் 1976ஆம் ஆண்டில் ‘அன்னக்கிளி’ திரைப்படம் மூலமாக தமிழ்சினிமாவில் தடம்பதித்தது. மேற்கத்திய இசையும், தமிழர்களின் பாரம்பரிய இசையும் கலந்த அன்னக்கிளி படத்தின் பாடல்கள் தமிழ்சினிமாவையே ஸ்தம்பிக்கவைத்தது, யார் இந்த ராசையா என அனைவரையும் புருவம் சுருக்கி பார்க்க வைத்தது. 1976 இல் தமிழ்த்திரையிசையின் ராஜாவாக முடிசூடிக்கொண்ட இளைராஜாவின் இசை ஆட்சி இன்னமும் தமிழ்நிலத்தை ஆண்டுகொண்டேதான் இருக்கிறது.

81வது பிறந்தநாளை கொண்டாடும் இசைஞானி, 1943 ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் ராமசாமி-சின்னதாயம்மாளுக்கு மகனாக பிறந்த ராசைய்யா, தனது அண்ணன்கள் பாவலர் வரதராஜன், ஆர்.டி,பாஸ்கர் மூலமாக இசைமேடையில் அறிமுகமானார். அன்னக்கிளி மூலமாக இளையராஜாவை தமிழ்சினிமாவில் அறிமுகம் செய்தது பிரபல தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம். அன்னக்கிளி படத்திற்கு பின்னர் பாரதிராஜா இயக்கிய ’16 வயதினிலே’ படம் இளையராஜாவை புகழின் உச்சியில் அமர வைத்தது, அதன்பின்னர் இளையராஜா தொட்டதெல்லாம் வெற்றிதான். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தியிலும் இவரின் பாடல்கள் பெரிய வரவேற்பைபெற்றன. நாட்டுப்புற இசையில் பயணத்தை தொடங்கிய இளையராஜா, ஆகச்சிறந்த கர்நாடக இசைப்பாடல்களையும், மேற்கத்திய பாணி பாடல்களையும் உருவாக்கியவர்.

லண்டன் டிரினிட்டி மியூசிக் தொலைதூர கற்றலில் கிளாசிகல் கிதார் வாசிப்பில் தங்கப்பதக்கம் வென்றவர் இளையராஜா, லண்டன் ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்கெஸ்ட்ராவில் சிம்பொனிக்கு இசையமைத்த ஆசியாவின் முதல் இசையமைப்பாளர் என்ற சிறப்பை பெற்றவரும் இவர்தான், இதனால்தான் இவர் மேஸ்ட்ரோ என்றும் புகழப்படுகிறார். திருவாசகத்துக்கு இவர் உருவாக்கிய சிம்பொனி அனைவரின் பாராட்டையும் பெற்றது. 2013 ஆம் ஆண்டில் இந்திய சினிமாவின் 100 வது ஆண்டை கொண்டாடும் சிஎன்என்-ஐபிஎன் கருத்துக்கணிப்பில் இந்தியாவின் மிகச்சிறந்த இசையமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் இவர், அதுபோல அமெரிக்க உலக சினிமா போர்ட்டல் ‘டேஸ்ட் ஆஃப் சினிமா’ பட்டியலிட்ட 25 சிறந்த இசையமைப்பாளர்களில் உலக அளவில் 9 ஆவது இடம் பிடித்தார் இளையராஜா.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கும், ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கும் இசையமைத்துள்ள இளையராஜாவின் பின்னணி இசைக்கோர்வை உயிர்த்துவம் மிக்கது. இவரின் பின்னணி இசைக்காகவும், திரைப்பாடல்களுக்காகவுமே பல படங்கள் ஹிட் அடித்திருக்கின்றன என்பது உண்மை. இளையராஜாவுக்கு நாட்டின் உயரியவிருதுகளான பத்மவிபூஷன்(2018) மற்றும் பத்மபூஷன்(2010) விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளன. இவர் இதுவரை இரண்டு தமிழ், இரண்டு தெலுங்கு, ஒரு மலையாளம் என மொத்தம் ஐந்து படங்களுக்காக தேசிய விருதை வென்றுள்ளார். இதுதவிர தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மத்திய பிரதேச அரசின் பல விருதுகளையும், இரண்டு கெளரவ டாக்டர் பட்டங்களையும் வென்றுள்ளார் இளையராஜா.

பெரும்பாலும் திரைக்கதைக்கு ஏற்றவாறு சூழ்நிலைக்கு ஏற்றவாறு தான் இயக்குநர்கள் இசையமைப்பாளர்களிடம் இசை கேட்பார்கள். ஆனால், இளையராஜாவின் இசை மற்றும் பாடல்களுக்காகவே கதை எழுதி இயக்கிய திரைப்படங்களும் உண்டு. அவை ‘அரண்மனைக்கிளி’ மற்றும் ‘வைதேகி காத்திருந்தாள்’. அதேபோல படத்தின் கதையை கேட்காமல் இளையராஜாவின் பாடலுக்கான சூழ்நிலையை வைத்து உருவாக்கிய படம் ‘கரகாட்டக்காரன்’.

‘நாயகன்’ படத்தில் ஒரு தாலாட்டு பாடல் வேண்டும் என இயக்குநர் மணிரத்தினம் கேட்ட போது, இளையராஜா இசையமைத்த இரண்டு மூன்று பாடல் இசையில் ‘தென்பாண்டி சீமையிலே’ இயக்குநரை திருப்திப்படுத்தி இருக்கிறது. அதே சமயம் தாலாட்டு பாடலை மனதில் வைத்து இசையமைத்த ‘நிலா அது வானத்து மேலே’ பாடல் இசையும் பிடித்து போக, அதையும் படத்தில் பயன்படுத்த நினைத்திருக்கிறார் மணிரத்தினம். அதனால், ராஜாவிடம் இந்த தாலாட்டு பாடலை கொண்டாட்ட பாடலாக மாற்றி கொடுங்கள் என கேட்க அப்படி உருவானது தான் ‘நிலா அது வானத்து மேலே’ பாடல். இதே போல மிக குறைந்த நேரத்தில் அதாவது அரை மணி நேரத்திலேயே இளையராஜா இசையமைத்த பாடல் ‘அவதாரம்’ படத்தில் இடம்பெற்ற ‘தென்றல் வந்து தீண்டும் போது’ பாடல்.

தமிழ்நாட்டை சுற்றிய மற்ற மாநிலங்களில் 70 களில் தொடங்கி இப்போதுவரை இந்தி பாடல்கள் மிக பிரபலமாகவே உள்ளது. ஆனால் மற்ற மொழி பாடல்களை நோக்கி மனமே செல்லாத வகையில், தமிழர்களின் காதுகளில் தேன் சொட்ட சொட்ட தமிழை புகுத்திய பெருமை இளையராஜாவையே சேரும் என்பது மிகையல்ல. ஆண்டுக்கு நூறு படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த 80களில் மட்டுமல்ல ஆண்டுக்கு ஒருசில படங்களுக்கு மட்டுமே இசையமைக்கும் காலத்திலும் இசையமைக்காத காலத்திலும்கூட அதிகாலை ஏழு மணிக்கு இசையமைப்புக் கூடத்துக்கு வந்துவிட்டார் என்றால் மாலை அல்லது இரவு வரை அங்கேயேதான் இருப்பார். ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருந்த அந்தக் காலத்தில் குடும்பத்துடன் செலவழிக்க அவருக்கு நேரமே இருக்கவில்லை. இளையராஜாவின் இளையமகன் யுவன் ஷங்கர் ராஜா இதைப் பல பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார். இன்றும் தன்னுடைய ஒரு நாளின் பெரும்பகுதியை இசைக்கே அர்ப்பணிக்கிறார். அவருடைய இசைப் பணியைப் படங்களின் எண்ணிக்கையோ ஊதியமோ என்றுமே தீர்மானித்ததில்லை.

Kokila

Next Post

சிஎஸ்கேவின் அதிர்ஷ்டம்!... ஐபிஎல்லில் மிரட்டிய பத்திரனா!... ஒருநாள் போட்டியில் சேர்ப்பு!... இலங்கை அணி அறிவிப்பு!

Fri Jun 2 , 2023
இலங்கை வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரருமான மதிஷ பத்திரனா, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய இளம் பந்துவீச்சாளராக, கேப்டன் தோனியின் ‘குட்புக்’கில் இடம் பெற்றுள்ள இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் பத்திரனாவுக்கு இலங்கை அணி பெரிய வாய்ப்பை அளித்துள்ளது. 20 வயதான இளம் பந்துவீச்சாளர் மதீஷ பத்திரனாவை இலங்கை அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட […]

You May Like