இடுக்கி மறை மாவட்டம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் திரையிடப்பட்டது.
இந்தியில் விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவான திரைப்படம், ‘தி கேரளா ஸ்டோரி’. இப்படத்தில் அதா சர்மா, பிரணவ் மிஷ்ரா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம் பல விமர்சனங்களை பெற்றது.
இத்திரைப்படம் கேரள பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் திட்டமிடப்பட்டு இணைக்கப்படுகின்றனர். இஸ்லாமியர்களுக்கு எதிரான போலியான கருத்து பிம்பத்தை இந்த திரைப்படம் கட்டமைப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினர். இருப்பினும் இத்திரைப்படம் ரூ.240 கோடிக்கு மேல் வசூலித்தாக கூறப்பட்டது
இந்நிலையில், இடுக்கி மறை மாவட்ட பேராயர் சார்பில் பள்ளி மாணவர்களுக்காக ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் கடந்த வாரம் திரையிட்டுக் காட்டப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இடுக்கி மறை மாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை பிரின்ஸ் காரக்காட் செய்திருந்தார். லவ்ஜிகாத்துக்கு எதிராக மாணவர்கள் விழிப்படைய வேண்டும் என்ற நோக்கில் படத்தை மாணவர்களுக்குத் திரையிட்டுக் காட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இடுக்கியிலுள்ள கேரள கத்தோலிக்கத் திருச்சபையின் கீழ் இயங்கி வரும் பள்ளியைச் சேர்ந்த 10 முதல் 12-வது வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இந்த ‘தி கேரளா ஸ்டோரி’ படம் காட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரின்ஸ் காரக்காட் கூறும்போது, “காதல் என்றபெயரில் பெண்களை மாயவலையில் விழவைத்து தீவிரவாதம் உள்ளிட்ட தேசவிரோத நடவடிக்கையில் தீவிரவாதிகள் ஈடுபடுத்துகின்றனர். இதுதான் உண்மையில் நடக்கிறது. பெண்களை தங்களது வலையில் சிக்கவைத்து அவர்களது தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை நாங்கள் நேரடியாகப் பார்த்துள்ளோம். எனவே, அதுதொடர்பாக மக்களிடமும், மாணவர்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த படத்தைத் திரையிட்டுக் காட்டினோம் என்றார்.