யோகி ஆதித்யநாத் காலில் ரஜினிகாந்த் விழுந்த விவகாரத்தில் ‘பூனைக் குட்டி வெளியே வந்துவிட்டது’ என திருமாவளவன் எம்.பி விமர்சனம் செய்துள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதிஉலகம் முழுவதும் வெளியானது. ரஜினிகாந்த் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்த ‘படையப்பா’ திரைப்படம் பெரிய வரவேற்பு பெற்று இன்று வரை பேசப்படுகிறது. 24 ஆண்டுகளுக்கு பின் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்தது நடித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது..
உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழ்நாட்டில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது. இதனை அடுத்து, ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் ரூ.375 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனிடையே இமயமலை சென்ற நடிகர் ரஜினிகாந்த் தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக உத்தரபிரதேசம் சென்றார். இதன் பிறகு உத்தரப்பிரதேச துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மவுரியா உடன் சேர்ந்து நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ஆகியோர் ஜெயிலர் திரைப்படத்தை பார்த்தனர்.
இதனையடுத்து லக்னோவில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ரஜினிகாந்த் ஆசிர்வாதம் பெற்றார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்பட்டது. ரஜினிகாந்த் உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையானது.
இந்த நிலையில், நாங்குநேரியில் சாதிவெறியில் மாணவர் மற்றும் அவரது சகோதரி தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நெல்லையில் விடுதலைச்சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் எஸ்டிபிஐ கட்சிகள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விசிக தலைவர் திருமாவளன் எம்பி , உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்தது குறித்து கடும் விமர்சனத்தை முன் வைத்தார். இது குறித்து அப்போது அவர் பேசியதாவது:
நடிகர் ரஜினிகாந்த் உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது ‘பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது’ என்பதையே காட்டுகிறது. அவர் கட்சி ஆரம்பித்திருந்தால், அவர் தமிழ்நாட்டுக்கு முதல்வர் ஆகியிருந்தால் யோகி ஆதித்யநாத்தே முதலமைச்சர் ஆனது போல் ஆகியிருக்கும் தமிழ்நாடு. எவ்வளவு வேதனையாக இருக்கிறது.
முதல் முறை தலைவர்களை சந்திப்பது பிரச்சனை அல்ல, ஆனால் இவர் காலடியில் விழுந்து வணங்குகிறார், அதற்கு என்ன பொருள், தமிழ்நாட்டு மக்கள் ரஜினியை எவ்வளவு உயர்வாக நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை ஒரு நிகழ்வில் காட்டி விட்டீர்கள்
இப்படிபைட்டவர்களின் கைகளில் தான் தமிழ் நாடு இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் தான் கருத்து உருவாக்கம் செய்யும் இடங்களில் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களிடமிருந்து தமிழ்நாட்டை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையும் நாம் காப்பாற்ற வேண்டும் ‘ என திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.