சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் 2-வது கணவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
ஆவடியைச் சேர்ந்த 13 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவரது தாயின் இரண்டாவது கணவர் பாவா பக்ருதீன் (39). மாற்றுத்திறனாளியான இவர், சிறுமி வீட்டில் தனியாக இருக்கும்போது பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதற்கிடையே, கடந்த 2 தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு தெரியாமல் பாத்ரூமில் மொபைல் போன் கேமராவை பாவா பக்ருதீன் ஆன் செய்து வைத்துள்ளார். சிறுமி குளித்துக் கொண்டிருந்தபோது பாத்ரூமில் செல்போன் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து தனது தாயிடம் அழுதவாறு சிறுமி நடந்தவற்றை கூறியுள்ளார். இதுகுறித்து, ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான விசாரணையில், பாவா பக்ருதீன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, பக்ருதீனை போக்சோவில் கைது செய்த போலீசார், அவரை திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.