அரசு மருத்துவமனையில் மருத்துவக் கழிவுகளை எரிக்கும்போது தீப்பிடித்து உயிரிழந்த கொசு ஒழிப்புப் பணியாளர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் மனப்பாறை மரவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்பு பணியாளராக பணிபுரிந்தவர் கலையரசன். இவர் கடந்த ஆண்டு மணப்பாறை பழைய அரசு மருத்துவமனையில் மருத்துவக் கழிவுகளை சுத்தம் செய்யும் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து, மருத்துவக் கழிவுகளை சேகரித்து தீ வைக்கும் போது கலையரசன் மீது தீப்பிடித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கலையரசன் இறப்புக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி அவரது தந்தை அர்ஜூனன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இன்று அந்த மனு விசாரணைக்கு வந்தது. ‘மனுதாரரின் மகன் மரவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கொசு ஒழிப்புப் பணியாளர். அவரை கொசு ஒழிப்புப் பணிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவரை மருத்துவக் கழிவுகளை சுத்தம் செய்யும் பணிக்கு அனுப்பியது ஏன் என்பது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிக்கவில்லை. மருத்துவக் கழிவுகள் முறையாக அழிக்கப்பட வேண்டும். அதற்காக தனியார் நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அப்படியிருக்கும் போது காலாவதியான மருத்துவக் கழிவுகள் பாதுகாப்பாற்ற முறையில் அழிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் மகன் மரண வாக்குமூலத்தில், குப்பைகளை தீ வைத்து எரிக்க அதிகாரிகள் கூறியதாக தெரிவித்துள்ளார்.
தெரிந்தே சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும் போது, அப்பாவி மனுதாரருக்கு மகன் இறப்புக்காக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. எனவே, மனுதாரருக்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். உயிரிழந்தவருக்கு 2 சகோதரிகள். அதில் ஒருவருக்கு திருமணமாகிவிட்டது. அவருக்கு ரூ.50 ஆயிரம், திருமணமாகாத சகோதரிக்கு ரூ.2.50 லட்சம் வழங்க வேண்டும். மீதமுள்ள ரூ.7 லட்சத்தை மனுதாரர் பெயரில் வங்கியில் 6 ஆண்டுக்கு வைப்பு நிதியாக வைக்க வேண்டும்,’ என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.