சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மாயாஜாலுக்கு வழங்கப்பட்ட இரண்டு ஏக்கர் நிலத்திற்கான பட்டாவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
சென்னை ஈ.சி.ஆரில் காணத்தூர் ரெட்டிகுப்பத்தில் அமைந்துள்ள மாயாஜாலில், நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இரண்டு ஏக்கர் அளவிலான இடம் வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசுக்கு சொந்தமான இந்த நிலத்தை நீண்ட கால குத்தகைக்கு விண்ணப்பித்து அது நிலுவையில் இருந்து, பின்னர் பட்டா வாங்கப்பட்ட நிலையில், வருவாய் துறை பதிவேடுகளில் மாற்றம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக, மாயாஜால் நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இரண்டு ஏக்கர் நிலத்துக்கு பட்டா வழங்க கடந்த 2015ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார்.

பின்னர், திருப்போரூர் தாலுகாவில் அந்த நிலம் சேர்ந்த நிலையில், தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திருப்போரூர் தாசில்தார் தரப்பில் மேல்முறையீட்டு வழக்கு 2017ஆம் ஆண்டு தொடரப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், இன்று நீதிபதிகள் டி.ராஜா மற்றும் குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது, குறிப்பிட்ட நிலம் தொடர்பான பல உண்மை தகவல்களை தனி நீதிபதி முன்பு மறைத்து பட்டா பெற்றுள்ளதால், அதனை ரத்து செய்ய வேண்டும் என அரசு தரப்பில் வாதிட்டப்பட்டது. இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், மாயாஜாலுக்கு வழங்கப்பட்ட இரண்டு ஏக்கர் நிலத்திற்கான பட்டாவை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தனர்.