குடும்ப பிரச்சனை தொடர்பாக புகார் அளித்தவரையே கைது செய்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த அவனேஷ் குமார் என்பவர் கடந்த 2019ஆம் ஆண்டு அளித்த புகாரில், குடும்ப பிரச்சனையில் தனது மகனை அவரது மாமனார், மைத்துனர் உள்ளிட்டோர் தாக்கியதாகக் போலீசில் புகாரளித்ததாகவும், ஆனால், புகார் குறித்து விசாரணை எதுவும் நடத்தப்படாமல், எதிர் தரப்பினர் அளித்த பொய் புகாரின் காரணமாக தனது மகனை ஒரு தீவிரவாதியைப் போல கைது செய்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த புகாரை விசாரித்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், இந்த விவகாரத்தில் அண்ணா நகர் சரக ஓய்வு பெற்ற காவல் உதவி ஆணையர் குணசேகரன் மற்றும் அரும்பாக்கம் காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் ஜெகதீசன் ஆகியோர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதற்கான இழப்பீடாகப் புகார்தாரருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டுமெனவும் இந்த தொகையைக் குற்றம்சாட்டப்பட்டவர்களிடமே வசூலிக்கவும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அப்போதைய அரும்பாக்கம் காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு உள்துறைக்கு மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.