கார் ஓட்டுநரின் வங்கிக்கணக்கில் 9,000 கோடி ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நெய்க்காரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார் ஓட்டுநர் ராஜ்குமார். இவர், சென்னை கோடம்பாக்கத்தில் நண்பருடன் அறையில் தங்கி வாடகை கார் ஓட்டி வருகிறார். கடந்த 9ஆம் தேதி இவரது செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் இருந்து ராஜ்குமார் வங்கிக்கணக்கில் 9 ஆயிரம் கோடி ரூபாய் பணம் டெபாசிட் ஆகியுள்ளது.
அப்போது ராஜ்குமார் அதில் எத்தனை பூஜ்ஜியங்கள் உள்ளது என்பதை என்ன முடியாமல் எவ்வளவு பணம் வந்துள்ளது என்பது தெரியாமல் குழம்பினார். மேலும், தனது வங்கிக் கணக்கில் வெறும் ரூ.15 மட்டுமே இருந்த நிலையில், யாரோ தன்னை ஏமாற்ற முயல்வதாக நினைத்துள்ளார். இதையடுத்து, ராஜ்குமார் தனது வங்கிக்கணக்கில் இருந்து நண்பருக்கு 21,000 பணம் அனுப்பிய பிறகு தான் 9 ஆயிரம் கோடி ரூபாய் தன் வங்கிக்கணக்கிற்கு வந்தது உண்மை என்பது தெரியவந்தது. இதனால், மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றார். ஆனால், அந்த மகிழ்ச்சி சில விநாடிகள் கூட நிலைக்கவில்லை.
நண்பருக்கு 21 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பிய சற்று நேரத்திலேயே, அவரது வங்கிக்கணக்கில் இருந்த அனைத்து பணத்தையும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி திரும்பி எடுத்துக்கொண்டது. பின்னர், தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து ராஜ்குமாரை தொலைபேசியில் அழைத்து 9 ஆயிரம் கோடி ரூபாய் பணம் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்தனர்.
மேலும், மீதித்தொகை 21 ஆயிரம் ரூபாயை திருப்பி செலுத்துமாறு வங்கித் தரப்பில் இருந்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னை தி.நகரில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கிளை அதிகாரிகளுடன், ஓட்டுநர் ராஜ்குமார் அவரது வழக்கறிஞர்கள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து வங்கி நிர்வாகம் 9000 கோடி ரூபாய் பணத்தில் இருந்து பரிவர்த்தனை செய்யப்பட்ட 21,000 பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டாம் எனவும், அதற்கு பதிலாக வாகன கடன் வழங்குவதாக வங்கி தரப்பிலிருந்து சமரசம் பேசி ராஜ்குமாரை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. கார் ஓட்டுநரின் வங்கிக்கணக்கில் 9,000 கோடி ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.