விஜய்யை கண்டு திமுகவுக்கு அச்சமில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். விஜய் நடித்துள்ள ‘கோட்’ திரைப்படம் வெளியாகும் வரை, கட்சி தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் வராது என தவெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படம் வெளியான பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி, மாநாடு தேதி என அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சேலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது திருச்சியில் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், விஜய்யை கண்டு திமுகவுக்கு அச்சமில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை திருச்சியில் நடத்த அமைச்சர் கே.என்.நேரு இடையூறு செய்வதாக கூறப்படுவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், மாநாட்டை தடுக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதாவை கண்டு பயப்படாத திமுக, விஜய்யை கண்டு பயப்பட போகிறதா..? என கேள்வி எழுப்பினார்.
Read More :